Breaking News

ஜோன் கெரிக்கு ‘வீட்டுவேலை’ கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் 
சி.வி.விக்னேஸ்வரன் கையளித்த ஆவணத்தை வாங்கிப்பார்த்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தனக்கு நிறைய வீட்டு வேலை தரப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வவுனியாவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவின் கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. காலை 10 மணி தொடக்கம், மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கூட்டத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதன்போதே, செய்தியாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த சுமந்திரன், ‘அமெரிக்க இராஜாங்கச் செயலருடனான சந்திப்பு அரை மணித்தியால சந்திப்பாகவே இருந்ததால், வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதம் ஒன்றை கையளித்தார்.

அதில் வடக்கு மாகாணசபை இயங்குவதற்கு தடையாக இருந்த விடயங்கள் தொடர்பாக விபரித்துக் கூறப்பட்டிருந்தது. அதை அவர் ஜோன் கெரியிடம் கையளிக்கும் போது, குறுகிய நேரத்தில் அரசியல் விடயங்கள் பேசப்படுவதால், வடக்கு மாகாணசபை தொடர்பான விடயங்களை எழுத்திலேயே கொண்டு வந்துள்ளேன் எனக் கூறியே, அதனை இராஜாங்க செயலரிடம் கையளித்தார்.

அதை வாங்கிப் பார்த்து விட்டு, தனக்கு நிறைய வீட்டு வேலைகள் (Home work) தரப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் கூறினார். அத்துடன், அமெரிக்கா இதுவரை முன்னெடுத்துள்ள, குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் கெரி எம்மிடம் கூறினார். அதேவேளை, புதிய அரசாங்கத்துடன் இணைந்து தீர்க்க வேண்டிய விடயங்களை தீர்க்க, அமெரிக்கா உதவும் எனவும் அவர் கூறினார் என்று குறிப்பிட்டார்.