உள்ளூராட்சி சபை கலைப்பில் சதி! உடனே தேர்தலை நடத்துங்கள்
"உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அதிகாரம் இருந்தும் அதனை செய்யாது கலைக்கப்பட்டமையானது ஐக்கிய தேசிய கட்சியின் சதித்திட்டமாகும். இதற்கு தாங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எனவே, உடனடியாக தேர்தல் நடத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம்." - இவ்வாறு தேசிய அரசிலிருந்து நேற்று வெளியேறிய நாடாளுமன்ற அலுவல்கள் முன்னாள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
தேசிய அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுக் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே முன்னாள் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
"உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நிறைவடைவதுடன் கலைப்பதானது சாதாரண விடயமாகும். அவ்வாறு கலைக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் உறுப்பினர்களை தெரிவு செய்வதே வழமையாகும். இதற்கு மாறாக விசேட ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதானது ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்றாகும்.
அது மட்டுமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்ட பலத்தை கட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துள்ள சதித்திட்டமே இது. உள்ளூராட்சி சபை அமைச்சருக்கு பதவிக்காலத்தை நீடிப்பதற்கான அதிகாரம் இருக்கின்ற நிலையில் இவ்வாறு செய்வதானது அசாதாரணமாகும்.
நாங்கள் தேசிய அரசிலிருந்து விலகுவதற்கு இது பிரதான காரணமாகும். இதற்கு எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்துவதுடன் உடனடியாக தேர்தலுக்குச் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். ஐ.தே.க. அரசினால் பெளத்த மதம் இழிவுபடுத்தப்படுகின்றது. இதனை பெளத்தர்களாகிய எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் மோசடி என்ற கூறி அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டு வருகின்ற அரசு தற்போது பெளத்த குருமார்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. அண்மையில் தியவடகே நிலமேவை இலஞ்சல் ஊழல் தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்தனர்.
இராகமையில் விகாரை ஒன்றில் யானை கொன்று புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நிலத்தை தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிக்குமார்களை அரசு கள்வர்கள் என்றும், விகாரைகளை - விலங்குகளைக் கொல்வோர் என்றும் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பெளத்த மதத்தை இழிவுபடுத்தப்படுகின்ற செயற்பாடுகளாகும்" - என்றார்.