பிரதமருடன் அரசியல் விளையாட்டிற்கு தயாரென்கிறார் டிலான்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எம்முடன் அரசியல் விளையாட்டுக்களை நடத்துவாரானால் அவரை வீட்டுக்கு அனுப்பும் வரை அரசியல் விளையாட்டுக்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராகி இருக்கின்றோம் என்றும் முன்னாள் அமைச்சரும் சுதந்திரக்கட்சியின் பேச்சாளருமான டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே டிலான் பெரேரா இதனை தெரிவித்தார்.
‘அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறையை மாற்றிய அமைப்பதற்கு எதிர்க்கட்சியிலிருக்கும் நாங்கள் மிகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால், தேர்தல் முறையை மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பாரிய தடையாக இருக்கின்றது. தேர்தல் முறை மாற்றுவதற்கு பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று ஏற்கனவே, ஜனாதிபதிக்கு வாக்குறுதி வழங்கியுள்ளோம். தற்போது கூட ஜனாதிபதிக்கு நாங்கள் இதனையே வலியுறுத்திக் கூறுகின்றோம்.
ஆனால், பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியோ நாட்டுக்குத் தேவையானவற்றை செய்யாமல் தமது கட்சியை பலப்படுத்துவதற்கு தேவையானவற்றையே செய்கின்றது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மற்றும் 20 ஆவது திருத்தங்களை நிறைவேற்றும் நோக்கிலேயே நாங்கள் அரசாங்கத்திலிருந்து இணைந்து அமைச்சு பதவிகளை வகித்தோம். ஆனால், அந்த உயரிய நோக்கத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பணியாற்ற முடியாது.
ரணில் விக்கிரமசிங்க அரசியல் ரீதியில் எம்முடன் அரசியல் விளையாட்டுக்களை நடத்துவாரானால் அவரை வீட்டுக்கு அனுப்பும் வரை அரசியல் விளையாட்டுக்களை நடத்துவதற்கு நாங்கள் தயாராகி இருக்கின்றோம். அரசியல் விளையாட்டை நடத்துவதற்கு எங்களுக்கும் தெரியும். மஹிந்த தரப்பையும் மைத்திரி தரப்பையும் ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தலில் கலமிறங்கி ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு எங்களால் முடியும். அதனை நாங்கள் செய்வோம்.
ரணில் விக்கிரமசிங்க 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றாமல் அரசியல் விளையாட்டை நடத்தினால் பதிலுக்கு அரசியல் விளையாட்டை நடத்த எமக்கும் தெரியும்’ என்றார்.