ஊழல் விசாரணைகளை நிறுத்துமாறு மகிந்த விடுத்த கோரிக்கை மைத்திரியால் நிராகரிப்பு
தனது ஆதரவாளர்களுக்கு எதிரான ஊழல் மோசடி விசாரணைகளை நிறுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று பிற்பகல், இலங்கை ஜனாதிபதிக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக, தனது பெயரை வெளியிட விரும்பாத உயர்மட்ட அரச அதிகாரி சின்ஹுவாவிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், மகிந்த ராஜபக்ச முன்வைத்த இந்த வேண்டுகோளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடியோடு நிராகரித்து விட்டார்.
இது நல்லாட்சியை பேணும் நடவடிக்கை என்றும், ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ள அவர், சட்டத்தில் தான் தலையிடமாட்டேன் என்றும் கூறிவிட்டார் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையையும், சிறிலங்கா அதிபர் நிராகரித்து விட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களே பிரதமரைத் தெரிவு செய்ய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரே அது முடிவு செய்யப்படும். என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாகவும் சின்ஹுவாவிடம் இலங்கை அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.