தற்போதைய தேர்தல் முறையிலேயே அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் - ஜனாதிபதி
புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யோசனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையின் படியே நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறுகட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை கொழும்பிலுள்ள அவரது பிரத்தியேக வாசஸ் தலத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு உறுதிமொழி வழங்கியிருக்கின்றார்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் எதிர்வரும் 13ஆம் திகதி அமைச்சரவையில் புதிய யோசனையை முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சிறுபான்மை கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்களை நேற்று மாலை சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக மக் கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி.திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம், நிஸாம் காரியப்பர், ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் ஹமீத் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கலந்துரையாடலில் புதிய தேர்தல் முறை மாற்றமானது எந்த வகையிலும் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதையும் சிறுபான்மை கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட ரீதியாக தேர்தல் நடத்தப்படும்போதுதான் சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும். தொகுதி முறையில் நடத்தப்பட்டால் பாதிப்பே ஏற்படும். புதிய தேர்தல் முறையில் பல் அங்கத்துவ தொகுதி முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கு வெளியே இந்த முறைமை அத்தியாவசியமானதாகும். அத்துடன் இரட்டை வாக்குச் சீட்டு முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும். வேட்பாளருக்கும் கட்சிக்கும் வாக்குக்களை வழங்கும் வகையில், இந்த முறைமை அமைவது நல்லது என்று சிறுபான்மையின கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 75 இலட்சமாக இருக்கும்போதே தேர்தல் தொகுதிகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தன. தற்போது நாட்டில் தேர்தல் தொகுதிகள் மீள் நியமனம் செய்யப்படுவது அவசியமானதாகும். ஆனால், வடக்கில் யுத்தத்தினால் மக்கள் பெரும் இடம்பெயர்வுகளை சந்தித்துள்ளமையினால் அங்கு தொகுதி மீள் நிர்ணயத்தை தற்போதைக்கு செய்யக் கூடாது. யாழ்ப்பாணத்தில் 11 தொகுதிகள் உள்ளன. அங்கு தொகுதிகளை மக்களின் தொகைக்கேற்ப குறைக்காது தொடர்ந்தும் அதனை பேணுவதற்கே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதேபோல் யுத்தத்தால் பவாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு இந்த முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் இந்த சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
இதனை விட தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் அந்த முறைமை தொடர்பில் மக்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும் இதனால் தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதைய விகிதாசார முறைப்படியே நடத்தப்பட வேண்டும் என்றும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டாலும் அடுத்து வரும் பொதுத் தேர்தல் தற்போதுள்ள விகிதாசர தேர்தல் முறையின் அடிப்படையிலேயே நடத்தப்படும். அது குறித்து எவரும் சந்தேகங் கொள்ளத் தேவையில்லை. ஆனால், மக்களுக்கு வாக்குறுதி அளித்தப்படியே தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.