Breaking News

ரணில் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தால் பாராளுமன்றம் உடன் கலைப்பு! மைத்திரி எச்சரிக்கை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வரப்போவதாக எதிரணியினர் அறிவித்திருக்கும் நிலையில் அதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்படுமானால் உடனடியாகவே பாராளும ன்றத்தைக் கலைத்துவிடப்போவதாக ஜனாதிபதி எச்சரித்திருப்பதாக தெரிவருகின்றது.

இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த சில கட்சிகள் பகிரங்கமாகத் தெரிவித்துவரும் நிலையில் அரசில் இருக்கும் 6 அமைச்சர்களும் தமது பதவிகளைத் துறக்கப் போவதாக தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான முயற்சிகள் அரசாங்கத்தை நெருக்கடி நிலைக்குத்தள்ளிவிடலாமென அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிட்டிருந்த தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படுமென கடந்த வாரம் தெரிவித்திருந்தது. 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் அறிக்கையை நாளை 20 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே 20 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதற்கான திகதி எதுவும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு நிலையிலேயே எதிரணியினர் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரும் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளனர். அதேசமயம் மைத்திரிபால அரசில் அமைச்சர்களாக இருக்கும் 6 பேர் அதிருப்தியடைந்து பதவிகளை துறக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் அரசாங்கம் பெரும் நெருக்கடி நிலையை எதிர்க்கொள்ள நேரிடலாமென கருதப்படுகின்றது.

இதனால் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் முயற்சியில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் எவரும் சம்பந்தப்படக்கூடாதெனவும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முற்படக்கூடாதெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சித் தரப்பை எச்சரித்திருப்பதாக அறிய வருகின்றது.

அதனையும் மீறி சுதந்திரக் கட்சித் தரப்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிரேரணையில் கைச்சாத்திட்டால் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்துவிடப்போவதாகவும் எச்சரித்துள்ளார். இவ்வாறானதொரு நிலை உருவாகுமானால் தேர்தல் மறு சீரமைப்பு தொடர்பான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பின் போடப்படலாமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.