நேபாள நிலநடுக்கம்! புராதன நகரமொன்றின் கண்ணீர் சிந்தும் அழிவு
உலக நாடுகளை அண்மையில் அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம். இயற்கை எழில் மிகுந்த அழகிய நாடான நேபாளம் தற்போது தரைமட்டமாகியுள்ளது. உயிரிழந் தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவடைந்த நிலையில், பொதுமக்கள் கூடாரங்களிலும் முகாம்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
பல்லாயிரம் மக்களைக் காவுகொண்ட நிலநடுக்கத்தினால் மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளத் திரும்பாத நிலையில், மீண்டும் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படுவதன் காரணத்தினால் மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். நிலநடுக்கத்தினால் நேபாளத்தில் கட்டப்பட்டுள்ள அணைகள் மிகவும் பலவீனமாகிவிட்டதாகவும், அதனால் அவை இடிந்து விழலாம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
பாதிப்பு
கடந்த 25 ஆம் திகதி நேபாளம் காத்மண்டுவில் 7.9 டிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,250 ஆக அதிகரித்திருப்பதுடன், சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
28 இலட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அந்த நாடு முழுவதும் 80 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.26 இலட்சம் குழந்தைகளும் 1.85 இலட்சம் கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில், சுமார் 42 இலட்சம் பேர் சுத்தமான குடிநீர் இன்றி தொற்றுநோய் தாக்கும் அபாயத்தில் உள்ளனர். 1.6 இலட்சம் வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. 1.43 இலட்சம் வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன.
இந்தியர்கள் உயிரிழப்பு
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 57 வெளிநாட்டவர்களும், 41 இந்தியர்களும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. 10 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் படுகாயம் அடைந்ததாகவும் மேலும், 82 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கிய இந்தியாவை சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மூலம் அவர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
உயிரிருடன் மீட்கக்கூடிய சாத்தியக்கூறு இல்லை
நேபாளத்தை நிலநடுக்கம் தாக்கி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இனிமேலும் உயிருடன் எவரும் மீட்கப்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பலரை மீட்கும் பணிகளில் சர்வதேச நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. அங்குள்ள பாதைகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகளை தொடர்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பியர்களின் கதி என்ன?
நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரம் சுற்றுலா பயணிகளின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்நிலநடுக்கத்தில் 12 ஐரோப்பிய ஒன்றிய பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் நிலநடுக்கத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட காத்மண்டுவிற்கு மீட்புப் பணி மேற்கொண்டு வருவதுடன், மருத்துவ வசதி மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இதேவேளை, நேபாளத்தில் நிலநடுக்கத்தின் போது சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பலர் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
சர்வதேச நாடுகளின் உதவி
இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, போலந்து, கனடா, இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்ரீலங்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பேரிடர் மீட்புக்குழுவினருடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த அதிகளவிலானோர் இரவு பகல் மீட்புப் பணிகளிலும் மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர். நேபாளத்திற்கு உதவி செய்யும் பொருட்டு தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய 8 அணிகளை இங்கிலாந்து அனுப்பியுள்ளது.
கிராமங்கள் முற்றுமுழுதாக அழிவு
நேபாளத்தில் பூகம்பம் உருவான பகுதியில் கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கிராமங்களும் இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளது. லாம்ஜங் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. நிலநடுக்கம் ஏற்பட்டு பல நாட்களாகியும் அப்பகுதிகளுக்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியாது வீதிகள் சேதமடைந்துள்ளன. சிந்துபால் சவுக்கில் மட்டும் 40 ஆயிரம் வீடுகள் அழிந்து விட்டதாக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றது. காத்மாண்டுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானங்களும் காத்மாண்டு விமான நிலையத்துக்கு வருவதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விமானங்கள் தரையிரங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அங்கு பல இடங்களில் வீதிகள் பிளவுபட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெற்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி கோரல்
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகிக்க போதுமான ஹெலிகொப்டர்கள் இல்லாமல் நேபாள அந்நாட்டு அரசு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றது. தற்போது 20 க்கும் மேற்பட்ட சர்வதேச ஹெலிகொப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் அதிக ஹெலிகொப்டர்களை அனுப்புமாறு சர்வதேச நாடுகளை நேபாள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2 பில்லியன் டொலர் வரை செலவாகும் என முதற்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. இதற்கு சர்வதேச நன்கொடையாளர்கள் உதவ வேண்டும் என நேபாள நிதியமைந்நர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் தொலைதூர பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை என்றும், அந்த பகுதிகளில் ஆய்வுப்பணிகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்புக்கள் முற்றுமுழுதாக சீரமைக்க ஒரு ஆண்டுகள் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சிந்துஜா தர்மராசா