ஜனாதிபதி கூட்டத்தில் இராணுவ வீரர் துப்பாக்கியுடன் சென்ற விவகாரம்! மஹிந்த விளக்கம்
அரசியல் மற்றும் தனிப்பட்ட ஒப்பந்தங்களுக்கு இராணுவ வீரர்களை தொடர்புபடுத்தக் கூடாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்ததாக இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
கைதாகி சிறையில் வைக்கப்பட்டுள்ள இராணுவ கொப்ரால் சேனக குமாரகே தனது பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். தன்னுடைய கோரிக்கையின்படியே அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஹம்பாந்தோட்டை கூட்டத்திற்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் சோதனையின் போது இராணுவ கொப்ரால் பொலிஸாரின் கோரிக்கையின் பிரகாரம் தனது வாகனத்தில் ஏறி பின் கூட்டம் முடிந்ததும் நாமலுடன் வீடு திரும்பியதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறு செய்யாத இராணுவ கொப்ராலை ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக கூறி நாமலின் பெயரையும் இணைத்து குற்றம்சாட்டியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டமை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பழிவாங்கலின் அங்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.