Breaking News

இலங்கையின் போர்வீரர் ஞாபகார்த்த நிகழ்வில் வழக்கம்போலவே பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு

மாத்தறையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள இலங்கையின் போர் வீரர்களை நினைவு கூரும் தேசிய நிகழ்வில், வழக்கம்போலவே பாரிய இராணுவ அணிவகுப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், முதல்முறையாக, ஓய்வுபெற்ற படையினரும் அணிவகுப்பில் தனியாக இடம்பெறவுள்ளனர்.

இந்த அணிவகுப்பில், 3255 இராணுவத்தினர், 1615 கடற்படையினர், 1116 விமானப்படையினர், 959 காவல்துறையினர், 559 சிவில் பாதுகாப்புப்படையினர், இடம்பெறவுள்ளனர். அத்துடன், இலங்கை படையினரின் போர்ச்சாகசங்களையும், வீரதீரத்தையும் வெளிப்படுத்தும், ஊர்திகளும், சிறிலங்கா படையினரின் போர்க்கருவிகள் மற்றும் வாகனங்களும், இந்த அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன.

நேற்று முன்தினம் இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மாத்தறைக்குச் சென்று இந்த அணிவகுப்பின் ஒத்திகையைப் பார்வையிட்டார். இந்த நிகழ்வு நாட்டின் இறைமைக்காக உயிரை அர்ப்பணித்த போர் வீர்ர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.