Breaking News

பலாலி இராணுவ முகாம் நுழைவு வாசலில் கற்பூரமேற்றிய வசாவிளான் மக்கள்

பலாலி இராணுவ முகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள் கற்பூரமேற்றி சிதறு தேங்காய் அடித்தனர்.

வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் நேற்று நடைபெற்றது.. வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக்கப்பட்ட வளைவில் இருந்து உள்நோக்கி சுமார் 200 மீற்றர் தூரத்தினுள்வசாவிளான் ஞானவைரவர் ஆலயம் உள்ளது. 

பெரிய வைரவர் ஆலயங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்ற இந்த ஆலயத்தில் மே மாதத்தில் வைரவர் மடை பெரிய அளவில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வசாவிளானை இராணுவம் கையகப்படுத்திய பின்னர் இந்த ஆலயத்துக்கு மக்களால் சென்றுவர முடியவில்லை.

புதிய ஜனாதிபதி பதிவியேற்ற பின்னர் கொண்டுவரப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டத்திலாவது வசாவிளான் ஆலயப்பகுதி விடுவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.  அது நிறைவேறாத நிலையில், மே மாத மடைத் திருவிழாவைக் கொண்டாடுவதற்கு முன்னோடியாக இன்று ஆலயத்துக்குச் சென்று வழிபடுவது என்று தீர்மானித்த நூற்றுக் கணக்கான வசாவிளான் மேற்கு மக்கள் இராணுவ வளைவுக்கு முன்னால் திரண்டனர்.

இராணுவமுகாம் நுழைவு வாசலில் கடமையில் இருந்த படையினரிடம் ஆலய வழிபாட்டுக்காக வந்திருக்கிறோம் என்பதை படை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களும், மக்கள் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

எனினும் உள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அத்தோடு பொதுமக்களைச் சந்திப்பதற்கு படை அதிகாரிகளும் நீண்ட நேரமாகியும் சமூகமளிக்கவில்லை. இந்நிலையிலேயே, சினம் கொண்ட மக்கள் முகாம் வாசலுக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைத்து, கற்பூரம் கொழுத்தி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.  முகாம் வாசலில் கற்பூரவழிபாட்டைச் செய்யவேண்டாம் என்று கடமையில் இருந்த இராணுவத்தினர் ஆரம்பத்தில் சொன்னபோதும், பொதுமக்கள் திரளாக வழிபட ஆரம்பித்ததும் விலகிச் சென்றுவிட்டனர்.

மே மாதம் முடிவடைவதற்குள் ஞானவைரவர் ஆலயத்தில் மடைத் திருவிழா பூசை வழிபாட்டுக்கு ஏற்பாடுசெய்து தருமாறு அங்கு அங்கு சென்றிருந்த மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அங்கு சென்றிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.