Breaking News

சம்பூரில் மீள்குடியேற முயன்றவர்கள் வெளியேற்றம்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப் படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப் பட்டுள்ளது.

தமது மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து தமது காணிகளை துப்பரவு செய்த காணிகளின் உரிமையாளர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். குறித்த காணி தொடர்பான வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.

காணிக்குள் நடமாடும் வெளியாரை வெளியேற்றுமாறு நீதிமன்ற அறிவித்தல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே பொலிஸார் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாக சம்பூர் மக்கள் கூறுகின்றார்கள். இதன் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக அந்தப் பகுதிக்குள் துப்பரவு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களும் தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பதவிக் காலத்தில் இவர்களது குடியிருப்பு காணிகள் உடபட அந்த பிரதேசத்திலுள்ள சுமார் 1100 ஏக்கர் நிலம் அரச முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்காகவும் கடற்படை பயிற்ச்சி முகாமிற்கும் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகளில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு சுவீகரிக்கப்பட்டிருந்த 818 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக ஜனாதிபதியினால் இம் மாதம் வெளியிடப்பட்ட விஸேட வர்த்தமானி அறிவித்தலின் பேரில் விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணிகள் இதுவரை அதிகாரபூர்வமாக அரசாங்கத்தினால் காணிகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. இருந்த போதிலும் காணிகளின் உரிமையாளர்கள் விரைவாக மீள்குடியேற்றம் இடம்பெறும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டு, சுயமாகவே சென்று காணிகளை துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை, சிலர் தற்காலிக கொட்டில்கள் அமைத்து தங்கியும் இருந்தனர்.

முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் முதலீடு செய்வதற்கு தயாராகவிருந்த நிறுவனமொன்று இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் 16ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.