யாழ்ப்பாண வன்முறைகளை புலிகளின் பாணி என்கிறார் மகிந்த
யாழ்ப்பாணத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பொலிசார் கவனமாக இருக்க வேண்டும் என்றும், முன்னரும் இதுபோன்ற செயற்பாடுகள் தான் விடுதலைப் புலிகள் எழுச்சி பெறக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
மகியங்கனை நகரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”யாழ்ப்பாணத்தில் காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள் மீது கற்கள் வீதித் தாக்கப்பட்டுள்ளன. இதே பாணியில் தான் விடுதலைப் புலிகளும் கூட ஆரம்பித்தனர். இது ஆபத்தான நிலைமை. எனவே காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.வடக்காக இருந்தாலும் சரி, தெற்காக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன்பாக அனைவரும் சமமானவர்கள். சட்டம் ஒழுங்கு பேணப்பட வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலை விரைவாக மாற்றப்பட வேண்டும். தற்போது நடக்கின்ற சம்பவங்கள் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுபவையாகவே உள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.