விபூசிகா மீண்டும் சிறுவர் இல்லத்தில்! ஆணை பிறப்பித்தது நீதிமன்றம்
விபூசிகாவை தொடர்ந்தும் தம்முடன் வைத்திருப்பது அவருக்குப் பாதுகாப்பு இல்லை. எனவே தனது மகளை மீண்டும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு விபூசிகாவின் தாயார் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றைக் கேட்டிருந்தார்.
இதற்கு இணங்க அவரை மீண்டும் மகாதேவா ஆச்சிரமத்தில் சேர்க்க நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க உதவினர் என்ற குற்றச்சாட்டில் விபூசிகாவும் அவரின் தாயாரான ஜெயக்குமாரியும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விபூசிகா சிறுமி என்பதால் அவரை மகாதேவா ஆச்சிரமத்தில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம், ஜெயக்குமாரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பிணையில் ஜெயக்குமாரி வந்ததைத் தொடர்ந்து, சிறுமி விபூசிகாவும் ஆச்சிரமத்தை விட்டு வெளியேறி தாயாருடன் இணைந்தார்.
ஆனால் இருவரும் தங்குவதற்கு பொருத்தமான பாதுகாப்பான வீடு கிடைக்காமையால் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் சேர்க்க நீதிமன்றின் உதவியை அவர் நாடினார். இன்று புதன்கிழமை அவரின் மனு விசாரிக்கப்பட்டு விபூசிகாவை சிறுவர் இல்லத்தில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது