"வித்தியாவின் படுகொலையை கண்டித்து இன்று வவுனியாவில் முழுக்கடையடைப்பு"
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை வவுனியாவில் முழுக் கடையடைப்பு செய்ய தீர்மானித்துள்ளதாக வர்த்தக சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ்/புங்குடுதீவு பாடசாலை மாணவி சி. வித்தியா மிகக் கொடூரமான முறையில் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டிக்கும் முகமாகவும் இறந்த மாணவிக்கு அனுதாபம் தெரிவித்தும் இன்று வியாழக்கிழமை வவுனியாவில் முழுக் கடையடைப்புச் செய்ய வுவுனியா வர்த்தகர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை மூலம் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்பதுடன் இனிவரும் காலங்களில் இது போன்ற கொடூர வன்செயல்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.
யாழ்/புங்குடுதீவு பாடசாலை மாணவி செல்வி.சி. வித்தியா படுகொலை இலங்கை சரித்திரத்தில் மறக்க – மன்னிக்க முடியாத ஒரு கொடூரம். இச்சம்பவம் இலங்கை பாடசாலை மாணவர்கள் சமூகத்தில் ஒரு கறுப்புப்புள்ளி.
ஆகையால் இலங்கை நீதித்துறை சட்ட வல்லுனர்கள் மற்றும் கல்விமான்கள் என அனைத்துத்தரப்பினரும் ஒன்றிணைந்து கவனத்திலெடுத்து இலங்கை அரசியல் சட்டத்தில் மேலதிக கடும் நடவடிக்கையை சேர்த்துக்கொள்ளும் முகமாக மாணவி வித்தியா சட்டம் என்ற பெயரோடு செயற்பட நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டுமென்று வவுனியா வர்த்தக சங்கம் ஒரு முன்மொழிவை முன் வைக்கிறது.