Breaking News

எல்லா மாகாணங்களில் படையினரை சம அளவில் நிறுத்த வேண்டும்- சுரேஸ்

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும், தமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பது குறித்து தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன. நாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். பல நூறு அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கும்படி, முன்னைய அரசாங்கத்திடமும், இப்போதைய அரசாங்கத்திடமும் கோரியும் இன்று வரை அது நடக்கவில்லை. வடக்கு மாகாணத்தில் அதிகளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது தமிழ்மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. நாட்டில் எல்லா மாகாணங்களிலும் படையினரை சம அளவில் அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

தாம் எந்த நேரமும் கண்காணிக்கப்படுவதாகவும், அச்சுறுத்தலுக்கு கீழ் வாழ்வதாகவும் தமிழர்கள் உணருகின்றனர். வடக்கில் மட்டும், ஒன்றரை இலட்சம் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.