விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்படுகிறது – படையினர் மத்தியில் ஜனாதிபதி அறிவிப்பு
நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதான- விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் வகுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெலிக்கந்தையில் உள்ள கிழக்குப் படைத் தலைமையகத்துக்கு நேற்று அவதானிப்பு பயணம் ஒன்றை மேற்கொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ஆகியோரும், ஜனாதிபதியுடன் கிழக்குப் படைத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தனர்.
அங்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு படையினர் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றினார்.“தேசிய பாதுகாப்புத் திட்டம் ஏற்கனவே, தேசிய பாதுகாப்புச் சபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளது. இது முப்படைகளின் தளபதிகளின் உதவியுடன் விரைவில் இறுதிப்படுத்தப்படும்.
தேசிய பாதுகாப்பு என்பது உணர்வுபூர்வமான ஒரு விவகாரம். நாட்டை முன்நோக்கிச் செலுத்துவதற்கு இது அவசியமானது. நாட்டின் அபிவிருத்திக்கு படையினரின் பங்களிப்பு மிக முக்கியமானது. எதிர்காலத்திலும் கூட நாட்டின் அபிவிருத்திக்கு படையினரின் பெறுமதி மிக்க ஆதரவு தேவைப்படுகிறது.” என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இலங்கை படையினருடன், அளவளாவிய மைத்திரிபால சிறிசேன, அவர்களுடன் இணைந்து சிற்றுண்டிகளையும் சாப்பிட்டார்.