Breaking News

பிரித்தானியாவில் இன்று தேர்தல் – உமா குமரனுக்கு அதிக வெற்றி வாய்ப்பு?

பிரித்தானியாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், லண்டனில் உள்ள ஹரோ ஈஸ்ட் தொகுதியில் போட்டியிடும், ஈழத்தமிழ் வேட்பாளரான உமா குமரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

உமா குமரன், எதிர்பாராத ஒரு அரசியல் நட்சத்திரமாக எழுச்சி பெற்றிருப்பதாக, ரிபியூன் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் கருத்து வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே இந்த தொகுதியில் கடுமையான இருமுனைப் போட்டி நிலவுவதாக, லண்டன் ஈவ்னிங் ஸ்ரான்டட் செய்தி வெளியிட்டிருந்தது. தொழிற்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் உமா குமரனுக்கு ஆதரவாக, தொழிற்கட்சியின் தலைவர் எட் மிலிபான்ட் ஹரோ ஈஸ்ட் தொகுதியில் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் அனைத்துலக விசாரணைக்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று, எட் மிலிபான்ட் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதால், லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் கவனத்தை ஈர்த்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹரோ ஈஸ்ட் தொகுதியின், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள, கொன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் பொப் பிளக்மனுக்கும், உமா குமரனுக்கும் இடையிலேயே கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த முறை, 3,403 வாக்குகள் வித்தியாசத்திலேயே பொப் பிளக்மன் வெற்றி பெற்றிருந்தார் என்பதால், இம்முறை அவருக்கான வெற்றி வாய்ப்பு குறைவடைந்துள்ளது.

அதேவேளை, ஹரோ ஈஸ்ட் தொகுதி ஆசியாவில் இருந்து குடியேறியவர்கள் அதிகளவில் வசிக்கும் தொகுதி என்பதால், அவ்வாறு குடியேறிய ஈழத்தமிழ் வம்சாவளியினரான உமா குமரனுக்கு ஆதுரவு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் 28 வீதம் இந்துக்கள் வசிப்பதும், உமா குமரனுக்கு சாதகமான விடயம் என்று, ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.