ஜோன் கெரியிடம் மைத்திரி முன்வைத்த மூன்று கோரிக்கைகள்
ஊழல், மோசடி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே, இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்காவின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் காவல்துறை, குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்துமாறு, அமெரிக்க இராஜாங்கச் செயலரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
இலங்கை ஜனாதிபதியின் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட, ஜோன் கெரி, இந்த விவகாரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலிடம், அறிவுறுத்தினார்.
சில இலங்கையர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பெருந்தொகையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பான விசாரணைக்கும் அமெரிக்க அதிகாரிகள் உதவ வேண்டும் என்றும், ஜோன் கெரியிடம், ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்,ஐ.நா அமைதிப்படையில், இலங்கைப் படையினரை அதிகளவில் உள்வாங்குவதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்றும், ஜனாதிபதி இந்தச் சந்தர்ப்பத்தில், கேட்டுக் கொண்டதாகவும், ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.