Breaking News

உள்ளகப் பொறிமுறை குறித்த அறிக்கையை செப்டெம்பரில் ஐ.நா.வுக்கு சமர்ப்பிப்போம்!

தமி­ழீழ விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான இறுதி யுத்­தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றதா என்­பது தொடர்பில் உள்­ளக பொறி­மு­றை­யொன்று ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. பொறிமுறை தொடர்பான அறிக்கை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­டரில் சமர்ப்­பிக்­கப்­படும் என வெளிவி­வ­கார அமைச்சின் ஊடகப் பேச்­சாளர் மஹி­ஷினி கொலோன் தெரி­வித்தார்.

உள்­ளக விசாரணை என்­பது சர்­வ­தே­சத்தை தெளிவு­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளே­யாகும். அதன்­மூலம் இரா­ணுவ வீரர்கள் குற்றவாளி கூண்டில் நிற்­க­வேண்­டிய நிலைமை ஏற்­ப­டாது. அதற்கு எமது அர­சாங்கம் ஒரு போதும் இட­ம­ளிக்­காது. கடந்த ஆட்­சி­யா­ளர்­களின் செயற்­பா­டு­க­ளி­னா­லேயே சர்­வ­தே­சத்­திற்கு பதி­ல­ளிக்கும் நிலைக்கு நாம் தள்­ளப்­பட்­டுள்ளோம். எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்­பி­லுள்ள வெளிவி­வ­கார அமைச் சில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமி­ழீழ விடு­தலை புலி­க­ளுக்கு எதி­ரான இறுதி யுத்­தத்தின் போது மனித உரிமை மீறப்­பட்­டதா என்­பது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­க­வுள்ளோம். முன்­னைய ஆட்­சியின் போது சர்­வ­தே­சத்­தினால் உள்­ளக பொறி­மு­றையை ஆரம்­பிக்­கு­மாறு அழுத்தம் பிர­யோ­கித்த போதிலும் அதனை உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்த தவ­றி­விட்­டது. 

இதன்­கா­ர­ண­மாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யகம் சர்­வ­தேச விசா­ர­ணையை முன்­னெ­டுக்க தயா­ராக இருந்­தது. எனினும் புதிய அர­சாங்கம் ஆட்­சிப்­பீடம் ஏறிய பின்னர் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை ஆரம்­பிப்­ப­தாக வாக்­கு­றுதி அளித்­ததன் பிர­காரம் தற்­போது எமக்கு அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பி­லான அறிக்­கையை செப்டெம்­பரில் நடை­பெ­ற­வுள்ள மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­டரில் சமர்ப்­பிக்க உள்ளோம்.

எமது இரா­ணுவ வீரர்­களை குற்­ற­வாளி கூண்டில் நிறுத்தும் நோக்கில் இதனை முன்­னெ­டுக்­க­வில்லை. உள்­ளக விசா­ர­ணை என்­பது சர்­வ­தே­சத்தை தெளிவுப்­ப­டுத்தும் பொறி­மு­றை­யாகும். மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்டை கொண்டு சர்­வ­தேசம் எம்மை குற்­ற­வாளி கண்­ணோடு பார்க்­கின்­றது. இதனை மாற்­றி­ய­மைக்க வேண்டும். இதனை கருத்திற் கொண்டே ஐக்­கிய நாடு­களின் அமைதி படையில் இணை­ய­வுள்ளோம். சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்ளது.

கொழும்பு துறை­முக நகர் திட்டம்

கொழும்பு துறை­முக நகர் அபி­வி­ருத்தி திட்டம் தொடர்பில் மீளாய்வு குழுவின் அறி க்கை கிடைத்­த­வுடன் இது குறித்­தான அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். எனினும் சீனாவை நாம் எந்த தரு­ணத்­திலும் புறக்­க­ணித்து செயற்­பட மாட்டோம். அனைத்து நாடு­க­ளு­டனும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட உள்ளோம்.

தூதுவர் நிய­மனம்

தற்­போது 40 நாடு­க­ளில் இலங்கை தூது­வர்­க­ளுக்­கான வெற்­றிடம் காணப்­ப­டு­கி­றது. அதனை நிரப்­பு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கிறோம்.

இந்­திய மீனவர் பிரச்­சினை

தற்­போது இந்­தியா மற்றும் இலங்­கையில் எந்தவொரு மீன­வர்­களும் தடுத்து வைக்­கப்­ப­ட­வில்லை. அனை­வரும் தற்­போது விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்த விடயத்தில் தற்காலிக தீர்வு குறித்தும் நிரந்தர தீர்வு குறித்தும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜூன் மாத கூட்டத்தொடருக்கு உயர் தூதுக் குழுக்கள் அனுப்பப்பட மாட்டாது. மாறாக இந்த கூட்டத்தொடருக்கு ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவே கலந்து கொள்வார் என்றார்.