தேர்தல்முறை மாற்றம்! களத்தில் ரணில், மைத்திரி
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி வரைபை தயாரிப்பதற்காக ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் இடம்பெறுவார்கள் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவானது எதிர்வரும் வாரம் முழுவதும் பேச்சு நடத்தி இறுதி தேர்தல் வபையை தயாரித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறைமாற்ற யோசனையை கொண்டு வந்தார். அதில் பல விடயங்கள் உள்ளன. குறிப்பாக 225 ஆக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களைன 255 ஆக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை எந்தவொரு கட்சியினதும் கோரிக்கைக்காக செய்யப்படவி்ல்லை. மாறாக சிறுபான்மை அரசியல் பிரதிநிதித்துசவங்களில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தொகுதி வாரியாக 165 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யவும் எஞ்சிய 90 ஆசனங்களை மாவட்ட விகிதாசார மற்றும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரட்டை ஆசனங்கள் மற்றும் இரண்டு வாக்குச் சீட்டுக்கள் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தொகுதி மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவங்கள் 5 முதல் 10 வீதமாக அதிகரிக்கப்படவேண்டும் என்றும் மாவட்ட ரீதியில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்றும் தேர்தல் மாற்ற யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் மிக நீண்டநேரம் ஆராயப்பட்டது. வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் சில விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாமையின் காரணமாக இழுபறி நிலை காணப்பட்டது. எனவே இறுதியில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இறுதி வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் குழுவில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் இடம்பெறுவார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவானது எதிர்வரும் வாரம் முழுவதும் பேச்சு நடத்தி இறுதி தேர்தல் வபையை தயாரித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார்கள்.
கேள்வி - தேர்தல் முறையை பாராளுமன்றத்தை கலைக்குமுன் நிறைவேற்றுவீர்களா?
பதில் - நிச்சயமாக நிறைவேற்றுவோம்.
கேள்வி- எப்போது பாராளுமன்றத்துக்கு வரும்?
பதில் - விரைவில் கொண்டுவருவோம். அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவோம். அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனை பெறப்படும். அதனையடுத்து பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும்.
கேள்வி - அடுத்த தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுமா?
பதில் - நீங்கள் அவசரப்படவேண்டாம். முதலில் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம். அதன் பின்னர் அது குறித்து ஆராய்வோம். நிறைவேற்றுவதே முக்கியமாகும்.