வரதராஜப்பெருமாளின் பாதையில் பயணிக்கும் விக்கினேஸ்வரன் - சுசில் பிரேம்ஜயந்த
வரதராஜப்பெருமாள் அன்று எவ்வாறு தனது தனிநாட்டுக் கோரிக்கையை ஆரம்பித்தாரோ அதையே இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்னெடுத்து செல்கின்றார். இவர்கள் தெரிவிப்பதைப்போல் வடக்குக் ,கிழக்கு பூமி அவர்களின் தாயகம் அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.
வடக்கில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தால் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை இடம்பெற்றிருக்காது. எனவே மாணவி வித்தியாவின் கொலைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. ஆனால் இன்று தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பொலிஸாரின் கைகளை கட்டிப்போட்டுவிடதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் நாம் எமது அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். இந்த மாணவிக்கு நடந்த மிகக் கொடூரமான மனிதாபிமானமற்ற செயற்பாட்டில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்பாவி பெண்களின் மானத்தையும் உயிரையும் பறிக்கும் நபர்கள் தொடர்பில் நாம் எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.அதேபோல் இந்த மாணவியின் ஆத்மா சாந்தியடையவும் நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
எனினும் இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சொல்லும் செய்தி என்னவென்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எமது ஆட்சியில் யுத்தத்துக்கு பின்னரான கடந்த ஐந்து ஆண்டுகளில் வடக்கில் இவ்வாறான மோசமான சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஒரு மாணவியை ஒன்பது ஆண்கள் வல்லுறவுக்குட்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் மோசமானதொரு நிலைமையாகும்.
இவ்வாறு மிருகத்தனமான சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறுவது மிகவும் குறைவாகும். வடக்கில் பொலிஸ் பாதுகாப்பு சரியாக இருக்குமானால் யாரும் இவ்வாறான செயற்பாடுகளை செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த அரசாங்கம் நல்லாட்சி, மனித உரிமைகள் பற்றி பேசிக்கொண்டு மக்களை சீரழிக்கும் வகையில் தமது பாதுகாப்புகளை மேற்கொள்கின்றது.
ஜனாதிபதி வடக்குக்கு சென்று அங்குள்ள நிலவரங்களை மாற்றியமைக்க கோருகின்றார். ஆனால் சட்ட ஒழுங்குகளுக்கு பொறுப்பான அமைச்சர் வாய் மூடி நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றார். இதுதான் எமது கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ள வேறுபாடு என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வடக்கில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் இந்த மாணவியின் படுகொலை இடம்பெற்றிருக்காது .ஆனால் அரசாங்கம் வடக்கில் சிவில் செயற்பாடுகளை தடுத்து பொலிஸாரின் கைகளை கட்டிப்போட்டுவிட்டனர்.
எனவே இந்த மாணவியின் படுகொலைக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக வடக்கில் பாதுகாப்பு அகற்றப்பட்டு விட்டது. எனவே இந்த ஒரு சம்பவத்துடன் குற்றங்கள் முடியப்போவதில்லை. நாட்டில் சிவில் பாதுகாப்பும் தேசிய பாதுகாப்பும் பலப்படுத்தப்படாவிடின் இந்த மாணவிக்கு நடந்த கொடுமையைப்போல் இன்னும் பல மாணவிகள் சீரழிக்கப்படுவார்கள்.
எமது ஆட்சியில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தின் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தது. எமது இராணுவ வீரர்கள் மக்களோடு மக்களாய் ஒன்றிணைந்து அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தினர். வடக்கில் சில அசம்பாவிதங்கள் நடந்திருந்தாலும் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் எவையும் நடக்கவில்லை. ஆனால் இன்று நடப்பவை மிகவும் கொடுமையானது.
இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இராணுவ வீரர்களே யுத்த குற்றத்தை பொறுப்பேற்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருப்பது மிகவும் மோசமானதொரு கருத்தாகும். இலங்கை மீதான ஜெனிவா அறிக்கை வரமுன்னரே இவர்கள் இங்கிருந்து அறிக்கையினை தெரிவித்து விட்டனர். வடக்கு, கிழக்கை தமது பூமியாக மாற்றிக்கொள்ள இவர்கள் எடுக்கும் முயற்சியே இவை அனைத்துமாகும்.
அன்று வரதராஜப்பெருமாள் எவ்வாறு தனது தனிநாட்டு கோரிக்கையை ஆரம்பித்தாரோ அதையே இன்று வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்னெடுத்து செல்கின்றார். இவர்கள் தெரிவிப்பதைப்போல் வடக்குக் ,கிழக்கு பூமி அவர்களின் தாயகம் அல்ல. இது இலங்கை என்ற நாடு. இங்கு அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழவேண்டும். மேலும் வடக்கில் சட்டத்துக்கு முரணான வகையில் அரசியல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது அவற்றை பிரதமர் கவனத்தில் கொள்ளாதுள்ளார்.
ஆனால் புங்குடுதீவு மாணவி விடயத்தில் முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக் ஷ வை மன்னிப்பு கேற்க சொல்கின்றனர். எனவே இந்த அரசாங்கத்தில் முழுமையாக பழிவாங்கும் அரசியல் மட்டுமே இடம்பெறுகின்றது என்றார்.