மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி
வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் புதன்கிழமை மாலை நடத்திய சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை நிறுத்துவது தொடர்பான, ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து, இந்தக் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த போதே, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நீண்டகாலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், பிரதமராகவும், இரண்டு தடவைகள், அதிபராகவும் இருந்திருக்கிறார். எனவே இன்னொருவருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் தலைவர் என்ற வகையில் தனது அடுத்த அரசியல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட அனுமதிக்க முடியாது என்ற மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை, கூட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், தற்போதைய ஐதேக அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை தோற்றுவிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்றுக்காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள், மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். இதன் போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டதாக, கூட்டத்தில் பங்கெடுத்த கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் தமது முடிவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள், கட்சியின் செயலாளர் சுசில் பிரேம ஜெயந்த மூலம், ஜனாதிபதித் தெரியப்படுத்தவுள்ளனர்.