அரச அதிகாரியின் படுகொலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது! த.தே.கூ
மட்டக்களப்பு, மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று (28) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் பொன்.செல்வராசா உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நீண்ட காலத்துக்கு பின்னர் மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூகசேவை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் மீண்டுமொரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் இக் காலகட்டத்தில் நடைபெற்றுள்ள இச் சூட்டுச் சம்பவமானது தமிழ் மக்கள் மத்தியில் பல சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
உண்மையில் சம்பவத்தின் சூத்திரதாரிகள் குறித்தும், சம்பவம் இடம்பெற்றதற்கான காரணங்கள் குறித்தும் உடனடியாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்க வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகும் என அவர்கள் தெரிவித்தனர்