குற்றம் இழைக்கப்படவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவும் - நாடு கடந்த தமிழீழ அரசு
இலங்கை யுத்தம் தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ள கருத்து தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வு, சித்திரவதை எதுவும் இடம்பெறவில்லை என்றும் அதனால் யுத்த குற்ற விசாரணைக்கு தயார் என்றும் சரத் பொன்சேனா ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.
படுகொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து சரத் பொன்சேகா அளித்துள்ள பதில் தொடர்பில் மகழ்ச்சி அடைவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மாணிக்க வாசகர் தெரிவித்துள்ளார். அவர் அப்பாவி என்று நினைத்தால் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைக்குமாறு சரத் பொன்சேகாவிற்கு சவால் விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முதல் கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை பிரிவுடன் ஒத்துழைக்குமாறு சரத் பொன்சேகாவை கேட்டுக் கொள்வதாக மாணிக்க வாசகர் கூறியுள்ளார். இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதியும் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி படுகொலை, பாலியல் வன்கொடுமை இடம்பெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 15 மொழிகளில் கையெழுத்து பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.