Breaking News

இலங்கை மீதான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் காணுமா?

இலங்கை தொடர்பில் அடுத்த சில மாதங்களுக்கு ஒபாமா நிர்வாகம் மிகவும் சாதகமான உறுதியான தொடர்பைப் பேண முயற்சிக்கும். ஏனெனில் இலங்கையில் புதிதாகத் தெரிவாகிய அரசாங்கம் மீதான இராஜதந்திர அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

இவ்வாறு thediplomat ஊடகத்தில், Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் முயற்சியாண்மை போன்றவற்றுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி அண்மையில் இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இலங்கையில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், 2009ல் மிக மோசமான அனைத்துலக மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான மீறல்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாலினோவ்ஸ்கி பயணம் மேற்கொண்டிருந்தார்.

இவர் இலங்கைக்கான தனது பயணத்தின் போது ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார். இதன்போது இவர் இலங்கையில் தற்போது எவ்வாறான சூழல் நிலவுகின்றது என்பது தொடர்பில் மிகவும் உற்சாகமடைந்திருந்ததாகக் குறிப்பிட்டார். இலங்கையின் முன்னணி பத்திரிகை கூட தற்போதும் நேர்மறை மனப்பாங்குடன் செயற்படுவதாகவும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் குறிப்பிட்டிருந்தார்.

ஜனவரி மாதத்தில் இலங்கையில் எதேச்சாதிகார ஆட்சியை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச தனது பதவியை இழந்தமை தொடர்பில் ஒபாமா நிர்வாகம் மிகவும் மகிழ்வடைந்திருந்தது. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க-இலங்கை உறவுநிலையானது விரிசலடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது அதாவது சிறிலங்காவில் ஆட்சி மாறிய பின்னர், அமெரிக்காவானது நல்லுறவைப் பேணுவதில் ஆர்வங் காண்பிக்கிறது.

இலங்கையின் அதிகாரம் கைமாறியமை தொடர்பாக அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தது போலவே இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருந்த மலினோவ்ஸ்கியும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இலங்கையுடன் குறித்த சில விடயங்கள் தொடர்பாக இரு தரப்பு உறவுகளை வளர்த்துக் கொள்வது தொடர்பில் அமெரிக்காவின் ஒபாமா அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்பதையே மலினோவ்ஸ்கியின் கருத்துக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக இலங்கையில் நிலவும் மனித உரிமை விவகாரங்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறுதல் போன்ற சில விடயங்களில் இலங்கையுடன் எவ்வாறான உறவைக் கட்டியெழுப்புவது என அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை.

இலங்கையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அரசியல் சீர்திருத்தத்தை முன்வைத்த போதிலும், போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் தொடர்பில் பொறுமை காப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டியிருக்கலாம்.

மறுபுறத்தில், இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்று அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் குறைப்பதுடன், பல்வேறு சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குதல் போன்றவற்றை உறுதிப்படுத்தும் 19வது திருத்தச் சட்டம் மீதான வாக்கெடுப்பு வெற்றியடைந்ததானது குறிப்பிடத்தக்க ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.

அரசியல் சீர்திருத்தம் மூலம் சிறிலங்காவில் மேலும் சாதகமான சூழலுக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை தொடர்பில் அடுத்த சில மாதங்களுக்கு ஒபாமா நிர்வாகம் மிகவும் சாதகமான உறுதியான தொடர்பைப் பேண முயற்சிக்கும். ஏனெனில் இலங்கையில் புதிதாகத் தெரிவாகிய அரசாங்கம் மீதான இராஜதந்திர அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

சிறிசேன விரைவில் நாடாளுமன்றத்தைக் கலைப்பார் எனவும் யூன் மாத முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னெடுக்கப்படலாம் எனவும் எதிர்வுகூறப்படுகிறது. உத்தியோகபூர்வமாக தேர்தல் பரப்புரைகள் ஆரம்பித்தவுடன், அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் அமைதியான, வெளிப்படையான தேர்தல்களை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பது தவிர இலங்கை விடயத்தில் எந்தவொரு தலையீட்டையும் மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்கான வழிவகையை ஆராயும்.

2009ல் போர் முடிவடைந்ததன் பின்னர், இலங்கையானது கடந்த சில ஆண்டுகளாக போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் போருக்குப் பின்னான மனித உரிமை மீறல்கள் போன்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டுமென அழுத்தம் வழங்கப்பட்டது. அனைத்துலக சமூகத்தின் முன்னால், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான தலைமைப் பொறுப்பை அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

இருப்பினும், ஒபாமா ஆட்சியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னமும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள இவ்வேளையில், இலங்கை மீது அழுத்தத்தை வழங்குவதில் உண்மையில் ஒபாமா ஆர்வங்காண்பிக்கிறாரா?

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரி சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராஜபக்சவின் தேர்தல் தோல்விக்குப் பின்னர், புதிய நிர்வாகம் இலங்கையில் ஆட்சி அமைத்துக் கொண்ட பின்னர், அமெரிக்காவின் பிறிதொரு உயர் அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொள்வதானது இலங்கைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே அடிப்படையில் நோக்கப்படுகிறது.

19வது திருத்தச்சட்டம் என்பது ஒருபோதும் முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விடயமல்ல என்பதையும் கெரி இதற்கு முன்னரேயே இலங்கைக்கான தனது பயணத்தை மேற்கொள்வதெனத் தீர்மானித்திருந்தார் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

hயின் இலங்கைக்கான பயணத்தின் நோக்கம் என்ன என்பது தொடர்பாக ஆராய்வதற்காக அவதானிகள் விழிப்புடன் உள்ளனர்.

மலினோவ்ஸ்கி இலங்கைக்கான பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தார். தற்போது ஜோன் கெரியும் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பிறிதொரு உயர் அதிகாரி ஒருவர் உண்மையில் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்வது நியாயமானதா?

அரசியல் சீர்திருத்தம் என்பது இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டும் என சிலர் வாதிடுகின்ற போதிலும் 19வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதானது சிறிசேனவுக்கும் இலங்கையின் ஜனநாயகத்திற்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். இலங்கையின் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது வருகின்ற மாதங்களில் மேலும் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது நடைபெறாவிட்டால், ஒபாமா நிர்வாகத்திற்கு எவ்வித பிரச்சினையுமில்லை.

தற்போது, கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது அமெரிக்காவின் இலங்கை மீதான வைராக்கியம் மிக்க அணுகுமுறையானது புதிய சாதாரணமான அமெரிக்கா-சிறிலங்கா உறவு என்பதையே சுட்டிநிற்கிறது.