காப்பாற்ற வழி ஏதுமின்றி கதறி அழுத நாளின் நினைவு
வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடந்த கொடூர யுத்தத்தின் இறுதிநாளின் நினைவு இன்று. இந்த நாள் பலருக்கு இறுதிப் பயணமுமாயிற்று.
வன்னியில் போர் ஆரம்பித்த நாள் முதல் எத்தனையோ இடப்பெயர்வு, பதுங்குகுழி வாழ்க்கை, ஒரு நேரம் உண்பதற்கும் உணவில்லாக் கொடுமை. மருத்துவ வசதியில்லாமல் மரணித்த சோகங்கள், இதனிடையே விமானக் குண்டு வீச்சுக்கள். ஆயுதம் ஏந்துவதற்கான ஆட்சேர்ப்புக்கள். எந்த வகையிலும் மீளமுடியாமல் ஓடி ஓடி முள்ளிவாய்க் காலில் சரணடைந்த துன்பத்தில் முற்றுப்பெற்ற யுத்தம் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை முடித்து வைத்துவிட்டு முடிந்துபோனது.
ஓ! சர்வதேசமே எங்களைக் காப்பாற்று; உயிர்ப் பிச்சைதா என்றெல்லாம் கத்திக் கதறி எந்தப் பலனும் இல்லாமல் பறிபோனவை போக, நந்திக் கடல் தாண்டிய அந்த மனிதவதை நாளின் ஆறாவது ஆண்டு நினைவு இன்று. இலங்கையின் பேரினவாத பாசிசத்துக்கு தமிழ் இனம் காலத்திற்குக் காலம் இரையாகிப் போனாலும் தமிழ் இனத்தைக் கொன்றொழி என்ற கட்டளையை நிறைவேற்றவே வன்னி யுத்தம் நடந்தது என்பதால் முள்ளிவாய்க்கால் கொடூர யுத்தம் முன்பு எப்போதும் நடந்திராத பேரழிவு. ஆதலால் எங்கும் மனித உடலங்கள் பெருகிக் கிடந்தன.
தாயை, தந்தையை, பிள்ளைகளை, மனைவியை, கணவனை... எப்படியாக இழப்பின் துயரத்தைச் சொல்லி அழமுடியும்? பெற்ற தாய் வெடிபட்டு தன் மண்ணை குருதியால் நனைத்துக் கிடக்கையில் தாயின் உடலை திரும்பிப் பார்த்தபடியே ஓடிச் சென்ற சோகக் கதைகள் கொஞ்சமல்ல.
கிரேதாயுகத்தில் இராமாயண யுத்தம். துவாபர யுகத்தில் பாரதப்போர். கலியுகத்தில் வன்னிப் பெரும் போர். முன்னைய யுகங்களில் நடந்த யுத்தங்களில் தர்மம் வென்றது. யுத்தத்தில் ஈடுபட்ட போர் வீரர்களே கொல்லப்பட்டனர். அவ்வாறு போரில் இறந்தவர்களுக்கும் இறுதிக் கடன்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் கலியுகத்தில் நடந்த வன்னி யுத்தத்தில் அதர்மம் வென்றது. போரில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். யுத்தத்தில் சிக்கி மரணித்தவர்களின் இறுதிக் கடன்களைச் செய்வார் யாருமின்றி உடலங்கள் நிலத்தில் கிடந்து போயின. உறவினர்களைப் பறிகொடுத்தவர்கள் கூடியிருந்து ஒப்பாரி வைத்து அழுது ஆற்றுப்படுவதற்கும் தடை விதித்து முட்கம்பி வேலிக்குள் முடக்கிய கொடுமைகள்.
அழுதால், பிள்ளை இறந்த செய்தி தெரிந்து விடுமே என்ற ஏக்கத்தில் கண்ணீராய் பீறிய குருதியை மீளவும் இதயத்தில் செலுத்தி துன்பம் எனும் சாவியால் இறுக்கி பூட்டிய அந்த நினைவுகள். ஆம், இன்று மே 18. 2009 மே 18இல் முடிவுற்றுப் போன யுத்தம் தந்த ஒட்டுமொத்த உறவுகளின் உயிரிழப்பை நினைவுகூருகின்ற நாள். இந்த நாளில் தீபம் ஏந்தி அஞ்சலிப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமை. இந்த நாளிலும் எரிகின்ற தீப ஒளியில் அரசியல் ஆதாயம் தேடுகின்ற கயமைத்தனத்தை விடுவதே நல்லது.
எங்களால் காப்பாற்ற முடியாமல் போன எங்கள் உறவுகளின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்போம். பிரார்த்தனை அமைதியாகத் துயில் கொள்ளும் ஆன்மாக்களுக்கு ஆறுதல் தருவதாக இருக்கட்டும். அழுகையும் எரிகின்ற தீப ஒளியும் அமைதியாய் தூங்குகின்ற ஆத்மாக்களை கலங்கச் செய்து விடலாகாது. இறைவனோடு இரண்டறக் கலக்கச் செய்யட்டும். உளப் பூர்வமாய் பிரார்த்திப்போம்.