தமிழர்களை வெற்றி கொள்வது எப்படி?- பலாலியில் படையினருக்கு பாடம் கற்பித்த ருவான்
இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த போருக்கு, மொழிப் பிரச்சினை முக்கியமானதொரு காரணம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பலாலி படைத்தளத்தில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழிப் பயிற்சி பெற்ற 320 படையினருக்கு, சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில், பொது நிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரியவுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவும், கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ருவான் விஜேவர்த்தன, “இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த போருக்கு, மொழிப்பிரச்சினை முக்கியமானதொரு காரணம். இரு இனங்களுக்கு இடையில் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு சிங்களவர்கள் தமிழ் மொழியையும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கற்க வேண்டும்.
மொழியின் ஊடாக படையினரும், சிங்கள மக்களும் தமிழர்களை வெல்ல முடியும்.” என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற பின்னர், ருவான் விஜேவர்த்தன வடக்கிற்கு மேற்கொண்டுள்ள இரண்டாவது பயணம் இதுவாகும்.
கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில், இவர் வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டு, கொழும்பு திரும்பியதும், அவரிடம் இருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.