வெட்கமின்றி மைத்திரி காலில் விழுந்த மகிந்த
முதுகெலும்பு பலமிருந்து, முதுகெலும்பில் ஒரு எலும்பிலாவது ஆத்ம கௌரவம் இருக்குமானால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலடிக்கு சென்று பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டிருக்கமாட்டார்.
இவ்வாறு ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வெட்கமின்றி திருடர்கள் கூட்டத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலடிக்கு சென்று தன்னை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். மகிந்தவுக்கு பிரதமர் பதவி வேண்டுமாம். மைத்திரிபால சிறிசேன பச்சை குழந்தை என்று மகிந்த எண்ணிக்கொண்டிருக்கின்றார் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.
63 லட்சம் வாக்குகளை பெற்று தெரிவான தலைவரிடம் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்து அடுத்த தேர்தல் நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்கிறார். மகிந்தவிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைத்தால் மைத்திரிபால சிறிசேன போர்த்தி கொண்டுதான் இருக்கவேண்டும். மகிந்த ஆச்சரியமான ஒரு நபர். அவரை மீண்டும் எழுந்திருக்க நாம் விடப் போவதில்லை. மீண்டும் நாட்டை அழிக்க இடமளிக்க மாட்டோம்.
நாங்கள் மகிந்த ராஜபக்சவின் காதை பிடித்து திருகி சுழற்றி விட்டு பாதாளத்தில் கொண்டு போய் கைவிட்டோம். எந்தளவு கீழ் மட்டத்திற்கு சென்றாலும் எப்படி துரத்தியடித்தாலும் மகிந்தவுக்கு அதிகார பேராசை இல்லாமல் போகவில்லை எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.