சர்வதேச விசாரணையில் எனக்கு உடன்பாடு இல்லை - ஜனாதிபதி
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது . எனினும் தேசிய ரீதியில் இடம்பெறவுள்ள விசாரணையே நல்லிணக்கத்திற்கான முதற்படி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டுயுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையில் எனக்கு உடன்பாடு கிடையாது. நமது நாட்டிற்குள் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான விசாரணைகள் தேசிய ரீதியில் மட்டுமே நடாத்தப்பட வேண்டும். அதன்படி அடுத்தமாதம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசாரணை செப்டெம்பரில் முடிவடையும்.
யுத்த விசாரணை சர்வதேச மட்டத்தில் நடைபெறுவதை முன்னைய அரசு விரும்பவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விசாரணை தேசிய ரீதியில் நடத்தப்படும் என சர்வதேசத்துக்குத் தெரிவித்தும் அரசு அவ்வாறு செய்யாமல் இழுத்தடித்து வந்தமையினால் முன்னைய அரசு சர்வதேசத்தின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டது. அத்துடன் தேசிய ரீதியில் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்திக்கொண்டதன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிரான பிரேரணையை அதனைத் தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் விசாரணை நடந்தது.
அந்த விசாரணையின் முடிவு கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகவிருந்தது. எனினும், தற்போதைய அரசு அதன் வெளியீட்டுக்கு காலஅவகாசம் கேட்கப்பட்டு எதிர்வரும் செப்டெம்பரில் அது வெளியாவுள்ளது. அந்த அறிக்கையின் தாக்கத்தை இயன்ற அளவுக்குக் குறைப்பதற்கான வழிமுறைகளை நாம் செய்யவேண்டியதே இன்றைய காலகட்டத்தின் அவசியம். எமது நாடு பல்வேறு உள்நாட்டு யுத்தங்களைச் சந்தித்துள்ளது. 1971ஆம் ஆண்டில் நடந்த கிளர்ச்சி அதில் ஒன்றாகும்.
அந்த யுத்தம் பற்றிய விசாரணை எவரது நிர்ப்பந்தமும் இன்றி அன்றைய அரசால் நடத்தப்பட்டதுடன் அரசொன்றின் கடமை என்பதையும் மறுக்கமுடியாது. அதேபோல 1988, 1989 களில் நடந்த கலவரங்களும் அத்தகையனவே. எனினும், அத்தகைய கலவரங்களின்போது நடைபெற்ற குற்றங்களைக் கிண்டிக் கிளறாமல் மூடிமறைக்கவேண்டிய அவசியம் இருந்தது.
எனினும் இறுதியாக நடந்த உள்நாட்டு யுத்தத்தின்போது நடந்த குற்றங்கள் தொடர்பில் தேசிய, சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் தேவை என நிர்ப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது இதன் பிரதிபலன் காலப்போக்கில் தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையே அவசியம் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.