Breaking News

வடக்கில் நாளையும் கதவடைப்புகள், போராட்டங்கள்!

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையிட்டு வடக்கு, கிழக்கில் பெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், பகிஷ்கரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.

இவற்றின் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அமைதியின்மை தோற்றம் பெற்ளறுள்ளது. பொது இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை புதன்கிழமையும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை தமிழ் ஆசிரியர் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதேபோன்று வடக்குமாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளை ஒரு மணிநேர புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன. 

அத்துடன், புங்குடுதீவு மகாவித்தியாலய பாடசாலை மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்தும் அப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கொலைச் சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் முன்னிலையாகக்கூடாது என்பதை இறுக்கமாக தெரிவிக்கும் வகையிலும் யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் நாளை புதன்கிழமை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 

இதேபோன்று கொக்குவிலில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களும் நாளை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதைவிட மாணவி படுகொலையை எதிர்த்து யாழ். மாவட்ட இளைஞர் கழகம் யாழ். நூலகத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. 

மேலும் யாழ்.மாவட்ட தனியார் பேருந்துகள், அரச பஸ்கள்‬ என்பனவும் சேவையில் ஈடுபடாது புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அரச அலுவலகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் என்பனவும் நாளை தமது எதிர்பபை வெளிப்படுத்தவுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.