சம்பூர் பகுதிக்கான காணி கட்டங்கட்டமாக விடுவிக்கப்படும் – சுவாமிநாதன்
திருகோணமலை சம்பூர் பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்காக சுவீகரிக்கப்பட்ட 818 ஹெக்டேயர் காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட மாஅதிபர் திணைக் களத்திலிருந்து காணியை விடுவிப்பதற்கான அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு தமக்கு கிடைத்துள்ளதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். அந்தவகையில் சம்பூர் பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்காக சுவீகரிக்கப்பட்ட 818 ஹெக்டேயர் காணி அனுமதியை இரத்துச்செய்வதற்கு முழு அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பூர் பகுதியிலுள்ள காணி விடுவிக்கப்பட்டவுடன், மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சம்பூர் பகுதியின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவிக்கையில்,
சம்பூர் பகுதிக்கான காணி கட்டங்கட்டமாக விடுவிக்கப்பட்டு வருவதாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் நிறைவுபெற்றதன் பின்னர் எதிர்வரும் வாரமளவில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார்.