கோத்தா குறித்த தீர்ப்புக்கு சவால் விடுக்கும் பிரதமர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையின் போது இரண்டு நீதியரசர்கள் கொண்ட குழுவிற்கு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆகவே, இது தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் குறித்த வழக்கினை ஒக்டோபர் மாதம் வரை தள்ளிப் போட்டமை நியாயமற்ற செயற் பாடாகும் என்றும் அவர் குறிப்பிட் டார். பௌத்த மற்றும் இந்து மதத்தலைவர்களை அலரி மாளிகையில் நேற்று சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தாக்கல் செய்த மனுவின் பிரதி நேற்று காலை எனக்கு கிடைக்கப்பெற்றது.
இந்த மனுவானது 600 பக்கங்களை கொண்ட கோவையாக காணப்பட்டது. எனி னும் குறித்த மனு உத்தியோகபூர்வமாக எனது கைகளுக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை. அமைச்சரவை காரியாலத்திற்கு நேற்று கிடைக்கப்பெற்ற மனுவின் பிரதியையே நான் பார்த்தேன்.
இந்த வழக்கு தொடர்பில் பிரதமர் என்ற வகையில் எனக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை. இது தொடர்பில் எனக்கு எந்தவித தகவலும் தெரிந்திருக்க வில்லை. ஊடகஙகளின் மூலமாகவே நான் இதனை அறிந்து கொண்டேன்.
இந்த வழக்கு ஒக்டோபர் மாதம் வரைக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற செயற்பாடாகும். நாட்டில் வெகு விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் உருவாக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் புதிய பாராளுமன்றத்தி்னால் இவ்வாறான வழக்கு தொடர்பில் நியாயமான முறையில் செயற்பட முடியாது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு அவசரமாக வழங்கப்படவேண்டும்.
மேலும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை ஏற்றுக்கொள்வதா, இல்லையா என்பதனை முடிவெடுக்கும் அதிகாரம இரண்டு நீதியரசர்களை கொண்ட குழுவிற்கு உள்ளது. எனினும் இவ்வாறான வழக்கில் தடை உத்தரவினை பிறப்பிப்தாயின் மூவர் கொண்ட நீதிபதிகளின் குழுவினாலேயே முடியும்.
எனவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை இரண்டு பேர் கொண்ட குழுவினரே வழங்கியுள்ளனர். இதன்படி மேற்குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சவாலுக்குட்படுத்த முடியும்.
கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வது குறித்தான சிக்கல் பொலிஸாரிற்கே உள்ளது. இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் பிரத்தியேகமான முறையில் சட்ட ஆலோசனை பெற்று செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் இலங்கையின் சட்டவிதானங்களின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும். அரசியலமைப்பின் 132 ஆவது ஷரத்தில் இது தொடர்பில் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுநீதியரசர்களின் தடை உத்தரவு செல்லுப்படியாகாது.
எனவே கோத்தாபய ராஜபக்ஷவின் வழக்கு தொடர்பான தீர்ப்பு முரண்பட கூடியதாக உள்ளது. எனவே இது குறித்து சட்ட ரீதியான ஆலோசனையை பெறவுள்ளேன். இதன்பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.