நானும் ரணிலும் ஒன்றிணைந்து பாரிய அரசியல் முடிச்சை அவிழ்த்துள்ளோம் - ஜனாதிபதி
நாட்டில் ஜனநாயகத்தை வெற்றிகொள்ளும் போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டுள்ளேன். நானும் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்து மிகப்பெரிய அரசியல் முடிச்சை அவிழ்த்துள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகவாதிகள் இனியும் வாய்மூடி இருக்காது சமூகத்தின் நலனுக்காககுரல் எழுப்பவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று கலைஞர் உபுல் சாந்த சன்னஸ்கலவின் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நான் இன்று ஜனாதிபதியாக இருந்தாலும் எனது முன்னைய நிலைமை தொடர்பில் நான் இன்னும் மறக்கவில்லை. பலகாலம் அமைதியாகவும் மற்றவர்களில் கதைகளுக்கு செவி மடுப்பவனாகவும் இருந்தேன். எனினும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் ரணில் விக்கரமசிங்க வுடன் இணைந்து வெற்றிபெற்றுள்ளேன்.
எமது போராட்டத்தில் ஜனநாயகத்தை விரும்பும் பலர் கைகோர்த்தமை எமக்கு கிடைத்த வெற்றியாகும். நல்ல ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் என அன்மைக்காலமாக எனக்கு நல்ல நட்பு வட்டாரம் உருவாகியது . அரசாங்கத்தில் இருப்பதை விடவும் எதிர்க் கட்சியாக இருக்கும் போதே அதிகமாக ஊடகத்துடனும், ஜனநாயகவாதிகளுடனும் பழகுவோம். அது யதார்த்தமான விடயமாகும். ஆனால் இன்று நாட்டின் நிலைமை மாறியுள்ளது நான் இப்போதும் ஊடகவியலாளர்களுடனும் ஜனநாயகவாதிகளுடனும் நெருக்கமாகவே பழகுகின்றேன்.
நாட்டில் ஜனநாயகம் சுயாதீனம் ஆகியவற்றை நிலைநாட்டுவதில் ஊடகத்தின் செயற்பாடுகள் மிகவும் அவசியமானது. அந்த தேவையினை நாம் இனங்கண்டு செயற்படுகின்றோம் . நாட்டில் இரண்டு மிகப்பெரிய சிக்கலான முடிச்சுகள் உள்ளன. ஒன்று சாப்பாட்டுக் கடையில் கட்டித்தரப்படும் “ரசம்” பை முடிச்சி. மற்றையது ஜே .ஆர் . ஜெயவர்தனவின் அரசியல் அமைப்பு முடிச்சி. நாம் இரண்டாவது முடிச்சியை மிகவும் இலகுவாக அவிழ்த்து விட்டோம். நானும் பிரதமர் ரணிலும் ஒன்றிணைந்து ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் அதிகார குவிப்பு அரசியல் அமைப்பை இலகுவாக மாற்றிவிட்டோம். இதனால் எதிர்கால அரசியல் பரம்பரை ஜனநாயக ரீதியிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
இந்த நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சிறந்த மனிதர்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்கின்றோம். இத்தனை காலமும் எமது சமூகத்தில் பல நல்ல நபர்கள், சமூக அக்கறை கொண்ட நபர்கள் இருந்தாலும் அவர்கள் எதோ ஒரு காரணத்திற்காக வாய்மூடி அமைதியாக இருந்தனர்.
ஆனால் எதிர்வரும் காலங்கள் ஜனநாயக வாதிகளுக்கானது. அதற்கான சுதந்திர சூழலை நாம் அமைத்துக் கொடுத்துள்ளோம். எனவே சமூக ஆர்வலர்களின் வாய்கள் இனியும் மூடப்பட்டிருக்கக் கூடாது. நாட்டுக்காகவும் , மக்களுக்காகவும் அவர்கள் தமது சேவையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.