தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆராய விஷேட குழு! தமிழரசுக் கட்சி வவுனியா கூட்டத்தில் தீர்மானம்
தேர்தல் சீர்திருத்த சட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஆராய்ந்து தமது நிலைப்பாட்டை முன்வைக்க தமிழரசுக் கட்சியினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் வன்னி விருந்தினர் விடுதியில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
“தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஆராயப்பட்டது. இதில் விசேடமாக 19 ஆவது அரசியல் அமைப்பு சீர் திருத்த சட்டத்தின் விடயங்கள் அதன் தாக்கம் தொடர்பாகவும் அதனால் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக கலந்துரையாடினோம். இதன் பின்னர் தற்போது வரவுள்ள தேர்தல் திருத்த சட்டம் தொடர்பாகவும் எமது உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டை எவ்வாறு எடுப்பது என நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம். அதன் நிமிர்த்தம் பிரேரிக்கப்பட்ட வித்தியாசமான முறைகளை சரியாக படித்து ஆராய்ந்து அதற்கும் மேலாக எங்களுடைய யோசனைகள் ஏதாவது இருக்குமாயின் அதனையும் பிரேரிக்குமாறு ஒரு குழு நியமிக்கப்பட்டு இருவார அவகாசத்தினுள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம்.
வரபோக்கின்ற தேர்தல் காரணமாகவும் அரசியல் நிலை காரணமாகவும் எங்களுடைய நிலைப்பாடுகளை அடி மட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அரசியல் விழிப்புணர்ச்சி செயலமர்வுகளாக அல்லது மக்கள் சந்திப்புகளாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சி தொடர்பாக செய்யப்படும் பொய் பிரசாரத்திற்கு பதில் கொடுக்கும் முகமாகவும் மத்திய குழு உறுப்பினர்கள் அவதானமாக இருந்து அவ்வப்போது தேவைப்பட்டால் அதற்கான சரியான விளக்கத்தை தெரிவிப்பதற்குமான நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கைகள் சில எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் முக்கியமாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் மார்ச் முதலாம் திகதியில் இருந்து கட்சி உறுப்புறுமையில் இரந்து விலகியிருந்தார். அவர் தானும் கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்திருந்தார். தேர்தல் ஆணையகமும் அதனை ஏற்று அவருடைய இடத்திற்கு இன்னொருவரை நியமிக்குமாறு கடிதம் கொடுத்துள்ளது.
ஏனையோருக்கு நாம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம் பதில் அளிக்காதவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் விளக்கம் அளித்தவர்கள் மீது விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை செய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அது விசாரணை நடத்தி மத்திய செயற்குழுவுக்கு மிக விரைவாக அறிக்கையை வழங்கமாறும் இன்று முடிவெடுக்கப்பட்டள்ளது.
அத்துடன் நல்லாட்சிக்கான பல முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதே ஜனநாயகத்தையுமு; நல்லாட்சியையும் நிறுவுவேன் என்பதை அடிப்படையாக வைத்தே. அதற்காகவே நாங்களும் எங்கள் ஆதரவை கொடுத்திருந்தோம்.
ஆனால் இரவோடு இரவாக நாட்டில் நல்லாட்சி வந்து விடவில்லை. அது படிப்படியாக நிகழவேண்டிய விடயம். 19 ஆவது அரசியல் அமைப்பு தீருத்த சட்டம் நல்லாட்சி நாட்டில் மீளவும் முளை விடுவதற்கு நல்ல சந்தர்ப்பமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை” என தெரிவித்தார்.