முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு வாரம் இன்று ஆரம்பம்! தடைகள் ஏற்படுமா?
முள்ளிவாய்க்கால் படுகொலை யுத்த நினைவு வாரம் நாளை ஆரம்பமாகும் நிலையில் அச்சமின்றி போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரவும் அவர்களுக்காக பிரார்த்தனைகளை செய்யவும் இம்முறையும் வழமைபோன்று தடைகள் ஏற்படுமா என்ற என்ற கேள்வி பல்வேறு தரப்புக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் நினைவு நாள் நெருங்கி வரும் நிலையில் அதுகுறித்த பேச்சுக்களும் பரபரப்புக்களும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஆரம்பமாகியுள்ளன.
2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் குறிப்பாக 12 முதல் 18ம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களின் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த ஒரு வார காலப் பகுதியை முள்ளிவாய்க்கால் படுகொலை தினமாக பிரகடனப்படுத்தி அக்காலப்பகுதியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
தமிழகம், புலம்பெயர் நாடுகளில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் 2009ன் பின்னர் வருடாவருடம் உணர்வெழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இவ்வாறான நினைவுகூரல்களைச் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடைகளை மீறி இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகள் படைத்தரப்பினரால் குழப்பியடிக்கப்பட்டதுடன், நிகழ்வுகளை நடத்தியவர்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் இம்முறை வட,கிழக்கு பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் கொல்லப்பட்டோரை நினைந்து அஞ்சலி செலுத்துமாறு அனைவருக்கும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலமே தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு குறித்து உலகுக்கு எடுத்துச் சொல்ல முடியும் என்றும், அதனூடாக நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர புதிய ஆட்சியின் கீழும் கடந்த ஆண்டுகளைப் போல் தடைகள் ஏற்படுத்தப்படுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.