நம்பகத்தன்மையுடைய விசாரணையை நடத்த வேண்டும்! சந்திரிகா வலியுறுத்து
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பதிலளிக்க செப்டெம்பர் வரை இலங்கையின் புதிய அரசு கால அவகாசம் கோரியுள்ளதால் இடைப்பட்ட இந்தக் காலப் பகுதியில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நம்பகத் தன்மையுடைய விசாரணையை உள்நாட்டில் முன்னெடுக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பண்டார நாயக்க சர்வதேச இராஜதந்திர கற்கை நிலையத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்குபற்றிய முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:
“வரலாறுகளில் இலங்கை சர்வதேச உறவுகளை பேணி இருந்ததுடன் வெளிநாட்டுக் கொள்கையில் சமநிலையை பேணியதும் காணக்கூடியதாக உள்ளது.
மாநிலங்களுக்கிடையிலான ஆயுதப்போராட்டங்கள், பிரச்சினைகள் இடம்பெற்றபோது அதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல பிராந்திய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர கொள்கைகள் ஊடாகவே இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலேயே இது போன்ற அமைப்புகள் உருவம் பெற்றன.
அரசாங்கத்தின் பகுதிகளும் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு நன்மதிப்பையும் கௌரவத்தையும் ஏற்படுத்தும் வகையில் இராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டும். அதனாலேயே எமது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாட்டில் நல்லாட்சி, நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் வெளியுறவுக் கொள்கை, இராஜதந்திர கொள்கைகளை சர்வதேச நாடுகளுடன் பேணிவருகிறார்.
இராஜதந்திர கொள்கையும் வெளியுறக் கொள்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. இதில் வெளியுறவுக் கொள்கையை மட்டும் கட்டுப்படுத்தி தனியொரு விடயமாக மறைத்துவிட முடியாது. உலகமயமாக்கலின் ஊடாக நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ சர்வதேச நாடுகளுடன் வெளிவுறவுக் கொள்கையை பேணவேண்டிய நிர்ப்ந்தத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை இருப்பதுடன் அதன் சாசனங்களில் நாம் கைசாத்திட்டிருப்பதால் அவ்வமைப்புக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளோம். இதனடிப்படையில் 30 வருட உள்நாட்டு யுத்தத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சர்வதேச கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கெதிராக சுமந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்க புதிய அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் வரை கால அவகாசம் கோரியிருப்பதுடன் இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் நம்பகத்தன்மையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.
இந்தப்பிரச்சினை தொடர்பிலும், இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் ஸ்தாபிப்பதற்கு எமது நட்பு நாடுகள் உதவிக்கரம் நீட்டுமென நாம் நம்புகிறோம்.
அத்துடன், ஒரு நாட்டின் பாதுகாப்பானது வெளியுறவு மற்றும் இராஜதந்திர கொள்கையிலேயே தங்கியிருக்கின்றது. ஆயுதபலம் ஒரு நாட்டுக்கு அத்தியாவசியமாக விளங்கியபோதும் சர்வதேச நாடுகளுடனான பேச்சுவார்த்தையின் போது இராஜதந்திர, வெளியுறவுக் கொள்கைகளே சிறந்த கருவியாக பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த தசாப்த காலத்தில் இலங்கையின் வெளியுறவு மற்றும் இராஜதந்திர கொள்கைகளில் தொழில்சார் நிபுணத்துவம் பேணப்படாத நிலை காணப்பட்டதுடன் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நிலை காணப்படாதெனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.