Breaking News

உயிர் காத்த தமிழ் மக்களை மைத்திரி மறந்து போவாரா?

“... எனக்கு முள்ளந்தண்டு இல்லை; ஆட்சித் திறமை இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். எனக்கு இருக்கக்கூடிய அதிகாரங்ளை நான் இன்னமும் கையில் எடுக்கவில்லை. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி காரணமாகவே, நான் அதிகாரத்தை கையில் எடுக்கவில்லை.

“ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்­வை எதிர்த்துப் போட்டியிட்டவன் நான். ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்றிருந்தால், மகிந்த ராஜபக்­ என்னையும் எனது குடும்பத்தையும் என்ன செய்திருப்பார் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

எனது சந்ததியே இல்லாமல் போயிருக்கும்...” இப்படிக் கூறியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதித் தேர்தலில் தனது உயிரை பணயம் வைத்தே தேர்தலில் போட்டியிட்டதாகக்கூறிய மைத்திரி தனது உரையில் இன்னுமொன்றை சேர்த்திருக்க வேண்டும்.

அதாவது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விடம் இருந்து என்னைக் காப்பாற்றியவர்கள் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை எனக்குத் தராமல் இருந்திருந்தால் எனது கதி! அந்தோ கதிதான்! என்ற உண்மையையும் ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்தால்; உண்மையை உரைத்த உத்தமர் என்று உலகம் அவரைப் போற்றியிருக்கும்.

பரவாயில்லை, செய்ந்நன்றி மறக்கின்ற இந்தக் காலத்தில் தமிழ் மக்கள் செய்த நன்றியை பகிரங்கப் படுத்தாமல் மைத்திரி விட்டமை தொடர்பில் நாம் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.  சில வேளை தமிழ் மக்கள் செய்த கைங்கரியத்தை தன் ஆழ்மனதில் இருத்திப் பூசிப்பதாக மைத்திரி கூறக்கூடும். 

எதுவாயினும், ஜனாதிபதி மைத்திரி நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை சந்தித்துப் பேசினார் என்ற செய்தி மைத்திரி தொடர்பில் ஐயத்தை ஏற்படுத்தவே செய்கிறது. ஊழல் மோசடிகள்-நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தச் செய்த சதித்திட்டங்கள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மகிந்த ராஜபக்­ மீதும் அவரது சகோதரர்கள் மீதும் எழுந்துள்ள நிலையில், இவ்வளவு கெதியில் மகிந்தவை சந்திப்பதற்கான தேவை மைத்திரிக்கு ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுவதில் நியாயம் உண்டு.

அதேநேரம் தங்களைச் சந்திப்பதற்கு அவாப்படுகிறேன் என்று மைத்திரியிடம் மகிந்த கேட்டிருந்தால், அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் எனக் கருதி சந்திப்புக்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மைத்திரி வழங்கியிருக்கலாம் என்றும் கருத இடம் உண்டு.

விழுந்த பாட்டில் குறிவைத்து; எழுந்தமான விமர்சனங்களைச் செய்து; ஒரு சுமுகமான சூழ்நிலைக் கருவைக் கலைத்து விடுவது மகாபாவம் என்பதால், மைத்திரி-மகிந்த சந்திப்புத் தொடர்பில் தமிழ்த் தரப்புகள் நிதானத்தைக் கடைப்பிடிப்பதே நல்லது. இருந்தும் மகிந்தவும் மைத்திரியும் சந்தித்த போது என்ன பேசிக்கொண்டனர் என்பதை அறிவது கட்டாயமானதாகும். 

சிலவேளை இச்சந்திப்பானது தொடர் சந்திப்புக்கான ஏற்பாடாகக் கூட இருக்கலாம். எது எப்படி யாயினும் மகிந்த வென்று மைத்திரி தோற்றிருந்தால் இப்படி ஒரு சந்திப்புக்கு இடம் இருந்திருக்குமா? என்பதை மகிந்த ஒரு கணம் சிந்திப்பது நல்லது.

-வலம்புரி-