இனப்பிரச்சினைத் தீர்விலும் ஒற்றுமைப்பட வேண்டும்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வை வீட்டிற்கு அனுப்புதல் என்பதில் எதிர்க் கட்சிகள் ஓரணியில் திரண்டதன் காரணமாக அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கின்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்த சட்டமூலமும் நிறைவேறியாயிற்று.
இந்த நாட்டிற்கு பொருத்தமற்ற ஜனாதிபதி ஆட்சி முறைமையை வலுக்குறைக்கின்ற செயற்பாடு நடந்து முடிந்ததையடுத்து, ஜனாதிபதி மைத்திரியின் அடுத்த கட்ட நடவடிக்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும்.
இலங்கையின் அபிவிருத்தி தடைப்பட்டது முதல் இந்த நாட்டின் பெருமைக்கு குந்தகமாக இருந்தது வரையான அத்தனைக்கும் இனப்பிரச்சினையே காரணமாகும். ஒரு நாட்டுக்குள் உள்ள இனங்கள் ஒற்றுமைப்பட்டு வாழமுடியாமல் தவிக்கும் போது அந்த நாடு எந்த வகையிலும் நிம்மதியாக இருக்க முடியாது.
ஆக, முதலில் நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட வேண்டும் அத்தகையதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும் போதே எல்லாம் சாத்தியமாகும். அந்த வகையில் மகிந்த ராஜபக்வை வீட்டுக்கு அனுப்பியமை; ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைப்புச் செய்தமை என்பன இந்த நாட்டிற்கு நன்மை பயக்க வேண்டுமாயின், தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். இதனைச் செய்யக்கூடிய தகைமையும் திறமையும் ஜனாதிபதி மைத்திரியிடமே உண்டு.
மகிந்த ராஜபக்வை வீட்டுக்கு அனுப்பியதுடன் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் சர்வாதிகாரத்தை இல்லாது செய்து இந்த நாட்டின் ஜனநாயகத்தை-இறைமையைக் காப்பாற்ற அடிப்படையாக இருந்தவர்கள் தமிழர்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரி நிச்சயம் உணர்வார் என நம்பலாம்.
அதேநேரம் இந்த உண்மையை சிங்களவர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் உணர்ந்து கொள்வது அவசியம். இந்த நாட்டில் எண்பது வீதமானவர்கள் சிங்களவர்கள், என்று மார்தட்டினாலும் பன்னிரண்டு வீதமான தமிழர்களின் வாக்குகளே இலங்கையின் ஜனநாயகத்தைக் காப்பாற்றியது.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வி கண்டு மகிந்த ராஜபக் வெற்றி பெற்றிருந்தால் சிங்கள அரசியல் தலைவர்கள் பலர் சிறைகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பர். ஆக, சர்வாதிகாரத்தின் எல்லைக்குச் சென்ற இலங்கையை மீட்டெடுத்து ஜனநாயகத்தை மீளவும் தளிரவைத்த பெருமை தமிழ் மக்களையே சாரும்.
இந்த உண்மை உணரப்படுவதனூடாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டால், இந்த நாட்டின் மேன்மை என்பது அபரிதமாக உணரப்படும் என்ற செய்தி அறியப்பட வேண்டும். எனவே கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாடு அனுபவித்து வரும் மிகப் பெரிய அவலமாக இருக்கக்கூடிய இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவது ஜனாதிபதி மைத்திரியின் தலையாய கடமையாகும்.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். கூடவே பெளத்த மத பீடங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஆதரவு தரவேண்டும். இவற்றை எல்லாம் ஒரு நிலைப்படுத்தி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்ற உயரிய பணியை ஜனாதிபதி மைத்திரி செய்வார் என்று நம்பலாம். இலங்கையை புதிய பாதையில் வழிப்படுத்திச் செல்ல வேண்டுமாயின் அதன் முதற்பணி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது அவசியம்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்