Breaking News

உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கும் முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை – கரு ஜெயசூரிய

உள்ளூராட்சி சபைகளைக் கலைப்பது தொடர்பான எந்த முடிவையும் அரசாங்கம் இன்னமும் எடுக்கவில்லை என்று இலங்கையின் பொது நிர்வாக உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக நல்லாட்சி அமைச்சர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘231 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் நாளையுடன் முடிவுக்கு வரவுள்ளது.

மேலும் 65 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம், வரும் ஜூலை 31ம் நாளுடனும், மேலும், 21 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம், செப்ரெம்பர் 21ம் நாளுடனும், மேலும் 2 சபைகளின் பதவிக்காலம், செப்ரெம்பர் 30ம் நாளுடனும், முடிவுக்கு வருகிறது.

எல்லா உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் வரும் ஒக்ரோபர் 30ம் நாளுடன் முடிவுக்கு வரவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நாளையுடன் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், சிறப்பு ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் அவை இயங்கும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அதேவேளை, பெரும்பாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளை கலைத்து விட்டு, சிறப்பு ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு மகிந்த ராஜகபக்ச தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.