இலங்கை மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது
இலங்கை மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka’ என்ற தலைப்பில் வொசிங்டனில் நேற்று வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில்-
புதிய அரசாங்கம் சிறுபான்மைத் தமிழர்கள் மீதான ஓடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து, நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தினால் மட்டுமே இலங்கையில் போருக்குப் பிந்திய நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என்ற சிறிய நம்பிக்கை உள்ளது.
நல்லிணக்கம் தொடர்பான வாக்குறுதிகளுடன் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இந்த ஆண்டின் துவக்கத்தில் தெரிவு செய்யப்பட்டது.
இதன் பின்னர், மார்ச் மாதம் வெளிவந்திருக்க வேண்டிய ஐ.நா விசாரணை அறிக்கை தாமதிக்கச் செய்யப்பட்டுள்ளது.
எனினும், உள்நாட்டுப் போரில் காணாமற்போயுள்ள பத்தாயிரக்கணக்கானவர்களின் நிலை, போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை உள்ளிட்ட மனித உரிமை விவகாரங்களில் அழுத்தம் கொடுத்து தீர்வு காண்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எந்தவொரு தீர்மானகரமான முடிவுக்கும் அனைத்துலக அழுத்தம் முக்கியமானது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.