செப்டெம்பர் அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு பொறிமுறை - மங்கள
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
இந்த நாட்டு அரசியலில் தற்போது கட்சிகளுக்கிடையிலான போட்டி காணப்படவில்லை. மாறாக நல்லாட்சி மற்றும் கொள்ளை ஆட்சிகளுக்கு இடையிலான போட்டியே நிலவுகின்றது என கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய அமைச்சர் புரட்சிக்கு எதிரான எதிர் புரட்சியொன்று தற்போது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக' கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், 'அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்டு தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் பொதுச் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்' என சுட்டிக்காட்டினார். அத்துடன், 'அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கும்' என அமைச்சர் சமரவீர இதன்போது கூறினார்.
அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என்று கூறிய அமைச்சர், இந்த உள்நாட்டுப் பொறிமுறையானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை தடுக்கும் ஓர் திட்டமாகவே அமையும் என்றார்.
இதன்மூலம், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை பதிலளிக்க சந்தர்ப்பம் கிட்டும் என்றும் அமைச்சர் கூறினார். யுத்தத்தின் போது ஆயிரம் பேரோ அல்லது 40 ஆயிரம் பேரோ இறந்தார்கள் என்பது பற்றி தெரியாது.
ஆனால், இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையொன்றை நடத்தி அக்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே இங்கு முக்கியத்துவமாகிறது என அமைச்சர் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இலங்கை மீதான சர்வதேசத்தின் பார்வை தற்போது முன்னேறியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இந்த முழு உலகமும் தற்போது அங்கிகரித்துள்ளது என்று மேலும் கூறினார்.