Breaking News

இலங்கைத் தமிழர் விவகாரம் – உலகத் தமிழர் பேரவையுடன் தென்னாபிரிக்க அமைச்சர் பேச்சு

இலங்கை விவகாரம் தொடர்பாக, லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளில் ஒன்றாக உலகத் தமிழர் பேரவையுடன், தென்னாபிரிக்க பிரதி அமைச்சர் நோமான்டியா பெகேட்டோ பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுக்கள் நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் நோமான்டியா பெகேடோவின் அழைப்பின் பேரில், லண்டனில் உள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்துக்குச் சென்று பேச்சு நடத்தியதாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இமானுவெல் தலைமையிலான குழு இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றது. இரண்டு மணித்தியாலங்கள் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து- குறிப்பாக தமிழர் விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும், உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இந்தப் பேச்சுக்களில் தென்னாபிரிக்க பிரதி அமைச்சர் நோமான்டியாவுடன், பிரித்தானியாவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் ஒபெட் மலபா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கிற்கான பிரதிப் பணிப்பாளர் கலாநிதி அனில் சுக்லால், பிரதி ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் நோகுகன்யா ஜேலே, தெற்காசிய விவகார பிரதி பணிப்பாளர் ரில்மன் பர்டர், மற்றும் பல தென்னாபிரிக்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.