நாளை அதிகாலை கொழும்பு வருகிறார் ஜோன் கெரி – கூட்டமைப்பையும் சந்திப்பார்
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, இலங்கைக்கான அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, நாளை அதிகாலையில் கொழும்பை வந்தடைவார் என்று ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயணத்தின் போது, இலங்கையில் நீண்டகாலமாக அதிகாரத்தில் இருந்த பலம்மிக்க அதிபராக விளங்கிய மகிந்த ராஜபக்சவை, தேர்தலில் தோற்கடித்த, இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவர் பேச்சுக்களை நடத்துவார்.
அத்துடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளையும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.