தமிழ் மக்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் – இல. கணேசன்
இலங்கையில் தமிழ் மக்கள் சமவுரிமை பெற்று வாழ வேண்டும் என்பதே தமது நோக்கம் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்ததாவது
நடந்து போன விடயங்கள் குறித்து நாங்கள் பேசிக்கொண்டு இருக்கவில்லை. அதனால் அதை ஒதுக்கிவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை என்பதையும் நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். இலங்கையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தமிழன் சமவுரிமை பெற்று, வாழ வேண்டும். இந்த எதிர்காலத் திட்டங்களைப் பற்றித்தான் நாங்கள் சிந்தித்து வருகின்றோம். அவர்களுக்கு தொழில் அமைய வேண்டும். கல்வி அமைய வேண்டும். நிலம் திருப்பித் தரப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்பிலும் நாங்கள் முயற்சி செய்கின்றோம். ஒன்றொன்றாக இப்பொழுது தான், அதற்கான விடிவுகாலம் தெரிந்து கொண்டிருக்கின்றது. மாற்றம் தெரிகிறது என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள். என்றார்.