Breaking News

ஜனாதிபதியை மாற்றியமை இனப்பிரச்சினைக்கான தீர்வன்று

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கு விஜயம் செய்து பலதரப்புடனும் சந்தித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வன்னிப் போரின் போது நடந்த நெட்டூரத்தை போர்க் குற்றமாக சர்வதேசம் விசாரிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்ற ஒரு நாடு. அதே நேரம் மகிந்த ராஜபக்­வின் ஆட்சியில் இலங்கை நாட்டில் ஜனநாயகம் நிலைக்க முடியாது என்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருந்தது. 

மகிந்த ராஜபக்­வை வீட்டுக்கு அனுப்புவதில் அமெரிக்கா கொண்ட உறுதிப்பாட்டின் காரணமாகவே இந்தியாவும் அதற்கு இசைந்தது எனலாம். இந்நிலையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்த ஒரு முடிவு நிறைவேறிற்று. எனினும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை; தமிழர்களின் உரிமை என்ற விடயத்தில் இன்னமும் தாமதம் ஏற்பட்டு வருவதை காணமுடிகிறது. 

அதே சமயம் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்பதற்கு இலங்கை அரசு எதிர்ப்புக் காட்டி வருவதும் தெரிகிறது. இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் கெரி, ஜனநாயகப் பயணத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் எனக் கூறியுள்ளார். இலங்கையில் ஜனநாயகம் நிலைக்க வேண்டுமாயின் தமிழ் மக்களுக்கு அநியாயம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 

போரினவாத சிந்தனையோடு ஆட்சிப் பீடம் ஏறி சிறுபான்மை மக்களை கொன்றொழிக்கலாம் என்ற நினைப்போடு அதிகாரம் செலுத்தியவர்கள்- செலுத்துபவர்கள் தப்பித்துக் கொள்வார்களாயின் இலங்கையில் எங்ஙனம் ஜனநாயம் நிலைக்க முடியும். 

ஆக, இனப்படுகொலை நடத்தியவர்களை சர்வதேச சமூகம் தண்டிக்கும் போதுதான் இந்த உலகில் இனப்படுகொலைகள் முற்றுப்பெறும். எனவே வன்னிப் பெருநிலப்பரப்பு உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் நடந்த மனிதப்பேரவலம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது அவசியம். இதனை அமுல்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அமெரிக்காவையே சாரும். 

இதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒருபோதும் இலங்கை ஆட்சியாளர்களால் எட்டப்பட முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்நாட்டிலேயே காணப்படவேண்டும் என்பது உண்மையாயினும் இதற்கு சர்வதேச அழுத்தம் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த அழுத்தத்தை தரக் கூடிய வல்லமை அமெரிக்காவிடமே உண்டு.

ஆகவே சர்வதேச போர்க்குற்ற விசாரணை மற்றும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொடுத்தல் என்ற முக்கியமான விடயங்களை அமெரிக்கா செய்யும் என்ற நம்பிக்கையே ஈழத்தமிழர்களின் வச்சிராயுதமாக உள்ளது என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றுவது என்பது இனப் பிரச்சினைக்கான தீர்வாகாது என்பது புரிதலுக்கு உரியது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் அமெரிக்கா மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர். 

எனினும் அமெரிக்காவின் அண்மைக்காலப் போக்கு மாறுபாடு உடையதாக தமிழ் மக்களால் உணரப்படுகிறது. அதாவது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆகிய பின்னர் இலங்கையில் இருந்த ஒரு பெரிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு விட்டது போல அமெரிக்கா கருதுவதாகத் தெரிகிறது. 

இலங்கையில் ஜனாதிபதிகளின் மாற்றங்கள் அல்ல பிரச்சினை. தமிழர்களுக்கு உரிமை வழங்கப்படாததே அடிப்படைப் பிரச்சினையாகும். ஆக, அறிக்கைகள் ஊடாக தமிழ் மக்களை ஆற்றுப்படுத்துதல் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலக தமிழ் மக்களுக்கு செயல் அளவில் உதவுவதே அமெரிக்காவின் கடமையாக இருக்கும்.

-வலம்புரி ஆசிரியர் தலையங்கம்