Breaking News

என்னை சுட முயற்சித்தவரை பிரதம வேட்பாளராக நியமிப்பதா? மைத்திரி கேள்வி



மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்கக் கோரி வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் கோசம் எழுப்பியபோது யாரை நியமிப்பது என எனக்குத் தெரியும் என ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீசேன தெரிவித்ததும் அவரது கடுந்தொனி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இலங்கை சுதந்திரக் கட்சியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் மைத்திரி பால ஸ்ரீசேனவின் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து, பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்‌ஷவையே தெரிவுசெய்யவேண்டும் என கூற வாசுதேவ நாணயக்காரவும் அதை ஆமோதித்திருந்தார்.

இதைக் கேட்டதும், எனக்கு தெரியும் யாரை பிரதம வேட்பாளராக தெரிவுசெய்ய வேண்டும் என கடுந்தொனியில் மைத்திரிபால ஸ்ரீசேன தெரிவித்ததும் அரங்கமே ஒருகணம் அமைதியானது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், மக்களால் நான் வென்றுவிடுவேன் என்ற அச்சத்தில் என்னை தனது துப்பாக்கிக்கு இரையாக்க நினைத்து இருதடவைகள் என்னை சுட நினைத்த மஹிந்த ராஜபக்‌ஷவை எப்படி பிரதம வேட்பாளராக்குவேன். அவரோடு பக்கத்தில் இருந்து செயலாற்றும்போதே அவரது தில்லுமுல்லுகள் அனைத்தையும் தெரிந்துகொண்ட நான் மகிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்‌ஷ தான் பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டுமென விரும்புபவர்கள் கட்சியை விட்டு வெளியேறி அவரோடு இணைந்து செயற்படலாம், ஆனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நான் எப்போதும் செயற்படமாட்டேன், ஏனெனில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கும் எனது உயிருக்கும் உத்தரவாதத்தையும் அளித்தவர் ரணில்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதாக இருப்பின், நீங்கள் 20வது சட்டமூலம் பாராளுமன்றத்திற்குள் வருவதற்கு முன்னரே இப் பாராளுமன்றத்தைக் கலைத்து உங்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மிக நெருக்கமானவர்கள் என தெரிந்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளராக அனுர பிரியதர்சன யாப்பாவையும், சுசில் பிராமஜெயந்தவை ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் செயலாளராகவும் நியமித்தேன் ஏனெனில் நான் யாரையும் எதிரியாக நினைத்ததில்லை. ஆனால் பழிவாங்கும் எண்ணம்கொண்ட மகிந்த ராஜபக்‌ஷவை கட்சிக்குள் அனுமதிக்க முடியாது என அமைதியாக காணப்படும் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன ஆவேசமாக கடுந்தொனியில் தெரிவித்ததும் இக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

இக் கூட்டத்திற்கு பிரதானமாக கலந்துகொள்ளவிருந்த தினேஷ் குணவர்த்தன இறுதிநேரத்தில் இதய சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனால் இக்கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.