பிரதான கட்சிகளை நம்பி இனியும் ஏமாற வேண்டாம்!
நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லவும் தொழிலாளர் சமூகத்தை பாதுகாக்கும் அரசியல் பாதையினை அமைக்கவும் நாம் தயார். பிரதான இரு கட்சிகளை யும் நம்பி இனியும் மக்கள் ஏமாற வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி அதன் மே தினக் கூட்டத்தில் தெரிவித்தது.
சமவுடமை ஆட்சிக்கான சிந்தனை எம்மிடம் உள்ளது. அதை செயற்படுத்த சரியானதொரு சந்தர்ப்பத்தினை மக்கள் எமக்கு வழங்க வேண்டும் எனவும் அக் கட்சி தெரிவித்தது. இதில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரா குமார திசாநாயக குறிப்பிடுகையில்,
உலக தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும், அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் தொழிலாளர் தினம் தான் நடத்தப்பட வேண்டும் ஆனால் இன்று பிரதான கட்சிகளினால் நடத்தப்படும் மே தினக் கூட்டங்கள் அரசியல் கூட்டங்களாக மாறிவிட்டது. கடந்த மே தினம் மஹிந்தவின் மே தினமாக அமைந்தது. இம்முறை மே தினக் கூட்டம் ரணிலின் கூட்டமாக மாறியுள்ளது. கடந்த மேதினக் கூட்டம் நீல நிறமாக நடந்தது அனால் இம்முறை பச்சை நிறமாக மாறியுள்ளது.
கடந்த முறையும் சாராயம், சாப்பாடு என்பன கொடுக்கப்பட்டு மேதினக் கூட்டத்தை மஹிந்த நடத்தினார், இம்முறையும் அதே செயலை ரணில் செய்துள்ளார் ஆகவே இன்று ரணில் தலைமையில் நடப்பது அரசியல் கூட்டமே தவிர மே தினக் கூட்டம் அல்ல. அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் மே தினக் கூட்டமும் அதிகாரதயை தக்கவைக்கும் செயலாகவே அமைந்துள்ளது. ஒரு புறம் மஹிந்தவின் ஆதரவுக் குழுவினர் அணி திரள மறுபுறம் மைத்திரி ஆதரவு அணி திரண்டுள்ளது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் உண்மையான தொழிலாளர்களின் உரிமைக்கான மே தினமாக நடைபெற்றுள்ளது.
நாட்டில் வர்க்க பாகுபாடு இன்றி, மொழி பேதமின்றி வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உழைப்பாளர் வர்க்கத்தினரும் இன்று எம்முடன் கை கோர்த்துள்ளனர். அதேபோல் இத்தனை காலமும் நாட்டு மக்களின் வறுமையையும். மஹிந்த அரசாங்கத்தின் அராஜக ஆட்சியினையும் கட்டுப்படுத்த மக்களை ஒன்றிணைத்தோம் ஆனால் இன்று அந்த போராட்டத்தில் வெற்றிகண்டுள்ளோம். ஆயினும் நாம் எதிர்பார்த்த முழுமையான தொழிலாளர்களுக்கான வெற்றி இன்னமும் கிடைக்கவில்லை. நாட்டிற்கு தேவையான அரசாங்கம் இன்னமும் அமையவில்லை. முதலாளித்துவ ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் இத்தனை காலமும் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பும் உரிமைகளும் இந்த முதலாளித்துவ சமூகத்தினால் பறிக்கப் படுகின்றது.
மேலும் குற்றவாளிகளையும், சுரண்டல் காரர்களையும் பாதுகாத்து குற்றங்களை மறைக்கும் வேலையினை இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மஹிந்த குடும்பத்தினால் செய்த மோசடிகளால் அனைதில்லும் பாதிக்கப்பட்டது நாட்டு மக்களே. அவ்வாறான குற்றவாளிகளை தண்டிக்காது பாதுகாப்பது ஏன். இந்த ஆட்சியையும் மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே மாறிவருகின்றது .
ஆட்சி மாறினாலும் மக்களின் வறுமை, கல்வியின்மை, போசாக்கின்மை எவையும் குறையவில்லை. மக்கள் எதை விரும்புகின்றனரோ அதற்கேற்ப ஆட்சி செய்வதே தலைவர்களின் பண்பாக இருக்க வேண்டும். ஆனால் இன்றும் ஆட்சியை தக்க வைக்கும் சுயநல அரசியலில் அப்பாவி மக்கள் சிக்கி தவிக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பல காலமாக நாட்டில் ஆட்சி செய்துள்ளனர். இன்று இரு கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி செய்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய இரு கட்சிகளும் பார்வையில் ஒரே மாதிரி இருந்தாலும் இவ் இரு கட்சிகளும் நாட்டில் ஆட்சி செய்ய தகுதியில்லாக் கட்சிகளே.
இவர்கள் தனித்து ஆட்சி நடத்தினாலும் சரி அல்லது ஒன்றிணைந்து ஆட்சி நடந்தினாலும் சரி இந்த நாட்டு மக்களுக்கான ஜனநாயக ஆட்சி ஒரு போதும் உருவாகப் போவதில்லை. ஒரு வர்க்கத்தின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்துகின்றனர். ஆனால் முழு சமூகத்துக்குமான ஜனநாயக ஆட்சி எம் சிந்தனையில் உள்ளது. அதை செயற்படுத்த சரியானதொரு சந்தர்ப்பத்தினை மக்கள் எமக்கு வழங்க வேண்டும்.
இனியும் இவர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். எமது பொருளாதாரக் கொள்கைகளும், கல்வி முறைமையும், சமூகக் கட்டமைப்பும் சர்வதேச தன்மைகளுடன் பொருந்தும் வகையில் தான் அமைந்துள்ளது. நாம் ஆட்சியை கையில் எடுத்தால் எந்த நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்வோம். இதில் தொழிலாளர் சமூகத்தின் பாதுகாப்பு பலமடையும்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுக் செயலாளர் ரில்வின் சில்வா உரையாற்றுகையில்,
நாம் நடத்துவது அரசியல் கூட்டமல்ல இன்றைய தினம் அரசியல் சாயம் பூசப்படாத ஒரு தினம் இந்த தினத்தில் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களிலும் அவர்களன் உரிமைகளிலுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எமது பேரணியும் அதைப்போல்லொன்றே. நாம் இன்றைய கூட்டத்தினையும் பேரணியையும் நடத்துவது உழைக்கும் வர்க்கத்தின் நாளைகளை பாதுகாக்கவே. எமது பயணம் அரசியலுக்கும் அப்பாலான பொதுவுடைமை சார்ந்தது. இதில் முதலாளித்துவ வர்க்கத்தின் பிடியில் இருந்து தொழிலாளர்களை பாதுக்காப்பதே எமது பிரதானமான இலக்காகும்.
வெற்றி எப்போதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூகத்தை சார்ந்தே இருக்கப் போவதில்லை. தொழிலாளர் வர்க்கத்திடமே நிரந்தரமான வெற்றி தங்கியுள்ளது . நவீன சமூகத்திலும் தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்தே உலகம் இயங்குகின்றது அதை மேலும் தெளிவு படுத்தவும் உறுதிப்படுத்தவுமே எமது இந்த மே தினக் கூட்டத்தினை மக்கள் வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளோம் . எனவே இன்று நடைபெறும் மே தினக் கூட்டங்களில் தொழிலாளருக்கான உண்மையான மே தினத்தினை அனுஷ்டிப்பது மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே. அதேபோல் அனைத்து தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் எம் பக்கமே உள்ளனர்.
இன்று அரசியல் நாடகமொன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதில் பிரதான இரு கட்சிகளும் வேஷம் போட்டுகொண்டிருக்கின்றனர் . இதை மக்கள் நம்பிய காலம் போதும் இனிமேல் உண்மையான ஆட்சிக்கும், உண்மையான ஜனநாயகத்துக்குமானதொரு ஆட்சியை அமைக்க வேண்டும் . இதில் ஜே.வி .பி யின் பங்கு மிக அதிகமாகவே உள்ளது. நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்ல மக்கள் முன்வரவேண்டும்.
நாட்டை மோசடிகளில் இருந்து பாதுகாக்கவும், ஜனநாயகத்தை உருவாக்கவும் மூவின மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கவும் மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே முடியும். எனவே எதிர்வரும் காலங்களில் மக்கள் தமது தெரிவினை சரியாக பயன்படுத்தி நாட்டை பாதுகாக்கவும் மக்களை பாதுகாக்கவும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.