Breaking News

ஜெ.யின் எதிர்­கால அர­சி­யல் ­வாழ்க்­கையை நிர்­ண­யிக்கும் தீர்ப்பு இன்று!

முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா மீதான, சொத்துக் குவிப்பு மேன்­மு­றை­யீட்டின் மீதான தீர்ப்பு இன்று வெளி­யா­கி­றது. இவ்­வ­ழக்கின் முடிவு என்­ன­வாக இருக்கும் என, அர­சியல் வட்­டா­ரங்­களில் பலத்த எதிர்­பார்ப்­புகள் எழுந்­துள்­ளன.

வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக, 66 கோடி ரூபாய் அள­வுக்கு சொத்­துகள் சேர்த்­த­தாக, முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா மீது, வழக்குத் தொட­ரப்­பட்­டது. இவ்­வ­ழக்கில், சசி­கலா, சுதா­கரன், இள­வ­ரசி ஆகி­யோரும் இணைக்­கப்­பட்­டனர். வழக்கை விசா­ரணை செய்த பெங்­களூர் தனி நீதி­மன்ற நீதி­பதி குன்ஹா, குற்றம் சாட்­டப்­பட்ட ஜெய­ல­லிதா உட்­பட நால்­வ­ருக்கும் தலா நான்கு ஆண்­டுகள் சிறை தண்­டனை விதித்தார். 

அப­ரா­த­மாக ஜெய­ல­லி­தா­வுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூவ­ருக்கும், தலா 10 கோடி ரூபாயும் விதித்தார். இதை­ய­டுத்து, நால்­வரும் பெங்­களூர் பரப்­பன அக்­ர­ஹாரா சிறையில் அடைக்­கப்­பட்டு, பின்னர் உச்ச நீதி­மன்ற உத்­த­ரவின் படி, பிணையில் வெளியே வந்­தனர். சிறை தண்­டனை, அப­ராதம் விதிக்­கப்­பட்­டதை எதிர்த்து, ஜெய­ல­லிதா உள்­ளிட்ட, நால்­வரும் கர்­நா­டக உயர் நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு தாக்கல் செய்­தனர்.

இவ் வழக்கு விசா­ர­ணைகள் மூன்று மாதங்­க­ளாக நீதி­பதி குமா­ர­சா­மியின் முன்­னி­லையில் நடை­பெற்­றன. மே 12 ஆம் திக­திக்குள், இவ்­வ­ழக்கில் தீர்ப்பு வழங்க, உச்ச நீதி­மன்றம் அவ­காசம் அளித்­தி­ருந்­தது. அதன்­படி இன்று 11ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு நீதி­பதி குமா­ர­சாமி, மேன்­மு­றை­யீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்­கு­கிறார். இந்த தீர்ப்பு, ஜெய­ல­லி­தாவின் அர­சியல் எதிர்­கா­லத்தை நிர்­ண­யிக்கப் போவ­தாக அமையும்.

ஊழல் வழக்கில், குறைந்­த­பட்சம் ஓராண்டு முதல், ஏழாண்­டுகள் வரை, சிறை தண்­டனை விதிக்க, சட்­டத்தில் இடம் உள்­ளது. ஜெய­ல­லிதா உள்­ளிட்ட நால்­வ­ருக்கும், நான்கு ஆண்­டுகள் சிறை தண்­ட­னையை, பெங்­களூர் தனி நீதி­மன்றம் விதித்­தது. பொது­வாக, மேன்­மு­றை­யீட்டு வழக்கில், என்­னென்ன வாய்ப்­புகள் உள்ளனவென்றால்,

* குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்றால், விடு­த­லை­யாவர்.

* நிரூ­ப­ண­மானால், கீழமை நீதி­மன்றம் விதித்த தண்­ட­னையை, உயர் நீதி­மன்றம் உறுதிசெய்யும்.

* அப­ராதம், சிறைத்தண்­டனை அதி­க­பட்சம் என, உயர் நீதி­மன்றம் கரு­தினால், தண்­ட­னை­யையும், அப­ரா­தத்­தையும் குறைக்­கலாம்.

* தீர்ப்பு வழங்கும் நாளில், உயர் நீதி­மன்­றத்தில், குற்­ற­வா­ளிகள் ஆஜ­ராகத் தேவை­யில்லை.

* கீழமை நீதி­மன்­றங்­களில்தான், தீர்ப்பு வழங்கும் திக­தியில், குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் ஆஜ­ராக வேண்டும். உயர் நீதி­மன்­றத்தில், அப்­படி ஒரு நடை­முறை இல்லை.

* தண்­டனை உறுதி செய்­யப்­பட்­டாலோ, குறைக்­கப்­பட்­டாலோ, குறிப்­பிட்ட நாட்­க­ளுக்குள், தனி நீதி­மன்­றத்தில் சர­ண­டை­யும்­படி, குற்­ற­வா­ளி­க­ளுக்கு, உயர் நீதி­மன்றம் உத்­த­ர­விடும்.

* உயர் நீதி­மன்றம் குறிப்­பிடும் நாட்­க­ளுக்குள், குற்­ற­வா­ளிகள் சர­ண­டைந்து, சிறைக்கு செல்ல வேண்டும். பின், உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்து பிணையில் வெளிவர வேண்டும்.

* ஊழல் வழக்கில் ஒரு­வ­ருக்கு சிறைத் தண்­டனை, அப­ராதம் விதிக்­கப்­பட்டால் கூட, அவர், தேர்­தலில் போட்­டி­யிடும் தகு­தியை, குறிப்­பிட்ட ஆண்­டு­க­ளுக்கு இழக்­கிறார். வெறும் அப­ராதம் மட்டும் விதிக்­கப்­பட்டால், அப­ராதத் தொகையை செலுத்­திய நாளில் இருந்து, ஆறு ஆண்­டுகள் வரை, தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. சிறை தண்­டனை விதிக்­கப்­பட்டால், சிறை தண்­ட­னையை அனு­ப­வித்த பின், ஆறு ஆண்­டுகள் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது.

உதா­ர­ணத்­துக்கு, ஊழல் வழக்கில் ஒரு­வ­ருக்கு, ஓராண்டு சிறை விதிக்­கப்­பட்டால், அந்த ஓராண்டு சிறை வாசம், ஆறு ஆண்­டுகள் என, மொத்தம், ஏழு ஆண்­டுகள், தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. ஊழல் வழக்கில், பொது ஊழியர் மீதான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்றால், அவர் மட்டும் விடு­த­லை­யா­வ­தற்கு வாய்ப்­புகள் இருப்­பதை மறுப்­ப­தற்­கில்லை எனவும், சட்ட வல்­லு­னர்கள் தெரி­விக்­கின்­றனர். பொது ஊழியர் மீதான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­டாமல், உடந்­தை­யாக, தூண்­டு­த­லாக இருப்­பவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்டால், அவ­ருக்கு மட்டும், தண்­டனை விதிக்க முடியும் என, வழக்­க­றி­ஞர்கள் தெரி­விக்­கின்­றனர். மேலும் இந்­திய அர­சி­யலில், முதன் முத­லாக, முதல்­வ­ராக பதவி வகிக்கும் போது, குற்­ற­வாளி என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டு, சிறைக்கு அனுப்­பப்­பட்­டவர் என்பதால், இவ்வழக்கின் தீர்ப்பை, அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து உள்ளது.

இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அனைத்து தரப்பினரும், தீர்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கியபடி உள்ளனர். ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையானால் மட்டுமே, நமக்கு எதிர்காலம் உண்டு என நினைக்கும், அ.தி.மு.க.,நிர்வாகிகள், அவர் விடுதலையாக வேண்டும் என, வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.