சீன – இலங்கை உறவில் தேவையற்ற இடையூறு – சீனா கருத்து
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத் தப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே, சீனாவின் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்த சர்ச்சை மற்றும், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால், சீன- இலங்கைஉறவுகளிலும், அபிவிருத்தித் திட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங்,
“சீனாவும், இலங்கையும் ஒன்றை ஒன்று மதிக்கின்ற நட்பு நாடுகள். கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட, பெருமளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்திருக்கின்றன. தாம் செயற்படும் நாடுகளின் சட்டங்களையும், ஒழுங்குமுறைகளையும் மதித்து நடக்கும் படி, சீன நிறுவனங்களிடம், சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சந்தை விதிமுறைகளைப் பின்பற்கும் அத்தகைய ஒத்துழைப்பு, இருதரப்புக்கும் நன்மைகளை அளிக்கும் என்று நம்புகிறோம். சில கூட்டுறவு திட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மீளாய்வு செய்யும் உள்நாட்டு நடைமுறைகளை பின்பற்றுகிறது. அது சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம். அதனை நாம் மதிக்கிறோம்.
சீனாவுடனான அண்மைய உயர்மட்டக் கலந்துரையாடலின்போது, சீனாவுடன் உறவுகளையும் ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக, இலங்கை தெளிவாக கூறியிருக்கிறது. துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது, உறுதியான முன்னேற்றம், பொருளாதார ஊக்குவிப்புக்கு உதவுதல், இலங்கையின் சமூக அபிவிருத்தி மற்றும் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு தேவையற்ற இடையூறை ஏற்படுத்தி விட்டது என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.