பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன் ஐ.ம.சு.மு.வின் ஆட்சியை உருவாக்குவோம் - நிமால்
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்பு ஐக்கிய மக்கள்சுதந்திர முன்னணி ஆட்சியை உருவாக்குவோம். அதே போல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா எச்சரித்தார்.
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதே எமது தனிப்பட்ட நிலைப்பாடு இது தொடர்பில் உரிய நேரத்தில் மக்களின் தேவைக்கேற்ற முடிவினை எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமது பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்தில் காண்பிப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பிரபா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்க்கட்சி தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் மூன்றாம் திகதி அரசியலமைப்பு பேரவையை உருவாக்கும் நோக்குடன் பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் உறுப்பினர்களை நியமிப்பதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவைப்படுகிறது. சிவில் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் நான்காம் திகதியிலிருந்து அரசியலமைப்பு பேரவை தனது கடமையை உரிய வகையில் முன்னெடுக்கும். அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் தெரிவு தொடர்பில் பிரதமருக்கும் எமக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தம் 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். ஆகவே தேர்தல் முறைமையை உள்ளடக்கிய 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பூரண ஆதரவினை நல்கும். அமைச்சரவை கூட்டத்தில் சிறுப்பான்மை அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளினால் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எவ்வாறாயினும் இந்த விடயத்தில் எமக்கு இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.
மக்களின் அபிப்பிராயத்தின் பிரகாரம் 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றியே ஆகவேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணை இதேவேளை அசராங்கத்தின் பிரதிநிதிகள் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் விடயத்தில் மக்களின் அவதானம் திரும்பியுள்ளது.
இதன்பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 9 ஆம் திகதி கொண்டு வர திட்டமிட்ட போதிலும் இதற்கு அரசாங்கம் இடம் வழங்கவில்லை. எவ்வாறாயினும் அமைச்சர் ரவி கருணாநாயக்க் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை ஜூன் மாதத்தில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
அதேபோன்று மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ,இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இதேவேளை தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது மக்களின் ்நம்பிக்கை இழந்துள்ளது். இந்த ஆட்சியில் இனிமேலும் நல்லாட்சியை எதிர்ப்பார்க்க முடியாது. ஆகையால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே இந்த தீர்மானத்தை எடுத்தது. ஆகவே குறித்த யோசனைக்கு கையொப்பம் இடப்பட்டு வருகிறது. நானும் கையொப்பமிடுவேன்.
எனினும் அரசியலமைப்பின் 20 அவது திருத்தச்சட்டத்திற்கு் எந்த காரணம் கொண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில ்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும். இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு தீர்மானம் எடுக்கப்படும்.
எனினும் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் பிரகாரமே குறித்த விடயங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படும். எனினும் இதன்காரணமாக பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது. அதற்கான முடிவினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுப்பார். இதன்போது ஊடகவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சி தலைவரிடம் தொடுத்தனர்.
கேள்வி்: பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான தீர்மானத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு என்ன?
இந்த கேள்விக்கு ஐ.ம.சு.மு பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த பதில் அளிக்கையில்,
இதற்கு எதிராக ஜனாதிபதியினால் ஒன்றும் செய்யமுடியாது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் எமது தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். எனினும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். எமது பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்தில் காண்பிப்போம் என்றார்.